லஞ்சம் கொடுத்து வங்கிக் கடன் பெற்றதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி. ராமசந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவின் ஸ்ரீபெரும்புதுார் எம்.பியாக கடந்த 2014-19 வரை இருந்தவர் கே.என்.ராமச்சந்திரன். இவர், கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் சக்தி இன்ஜினியரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லுாரியின் தலைவராக ராமச்சந்திரனின் மகன் ராஜசேகரன் உள்ளார். இந்நிலையில், கல்லுாரியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து, அதற்காக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமச்ந்திரன் விண்ணப்பித்துள்ளார். அப்போது, வங்கியின் மேலாளராக இருந்த தியாகராஜன் விண்ணப்பத்தை விதிகளுக்குட்பட்டு, முறையாக கையாளாமல் ரூ.20 கோடி கடன் வழங்கி உள்ளார்.

இந்த கடன் அறக்கட்டளைகளுக்கென நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிக தொகை என கூறப்படுகிறது. இருந்தும் இந்த கடனை மேலாளர் தியாகராஜன் வழங்கி உள்ளார். இதற்கு லஞ்சமாக, தியாகராஜன் மகன் அனிருத் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவதற்கும், தனது குடும்பம் அமெரிக்கா செல்வதற்குமான விமான டிக்கெட் தொகை ரூ.2.69 லட்சத்தை அறக்கட்டளையிலிருந்து ராமச்சந்திரன் செலுத்தியதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக வந்த புகாரின்படி கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் வங்கி மேலாளர் மற்றும் ராமச்சந்திரன் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை கலெக்டர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில் வங்கி மேலாளர், முன்னாள் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் ஆகியோரும் குற்றவாளி என நீதிபதி ரமேஷ் தீர்ப்பு வழங்கியுள்ளார். இவர்களுக்கு தொடர்பான தண்டனை விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், அதிமுக முன்னாள் எம்.பி. ராமசந்திரனுக்கும், அவரது மகளுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.