கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து காணாமல் போனதாக கோட்டாறு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.விசாரணையில், அந்த சிறுமி நாகர்கோவிலைச் சேர்ந்த 20 வயது காதலனுடன் திருமணம் செய்ய திட்டமிட்டு தலைமறைவாகியது தெரிய வந்தது. காதலர்களை போலீசார் மீட்டனர்.இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில்தான் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் தாய்க்கு முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனிடம் தொடர்பு இருந்துள்ளது.அதன் அடிப்படையில் 2017ம் ஆண்டு, தன் மகளுடன் முருகேசனைப் பார்க்கச் சென்றபோது அவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.அதேபோல் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்ததாகவும் அந்த சிறுமி தெரிவித்து இருக்கிறார். தாயின் தொடர் தொல்லையால் தான், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானதாக சிறுமி கதறி அழுதுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், குழந்தைகள் நல அதிகாரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்  பேரில், போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே நாஞ்சில் முருகேசன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. திங்களன்று அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நாஞ்சில் முருகேசன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமறைவான நாஞ்சில் முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியின் தாய், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர்.