ஜெயலலிதா தொண்டையில் ஆலகால விஷம்.. முன்னாள் அமைச்சர் சொன்ன 'அதிர்ச்சி' தகவல்..
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொண்டையில் ஆலகால விஷம் இருந்தது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 4-ந்தேதி நிறைவடைந்தது. மொத்தம் 74,383 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கடந்த 5-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. இதில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. 14,324 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டனர். இந்நிலையில் எல்லா வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சி தேர்தலில் 15வது வார்டில் போட்டியிடும், அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தீவிரமான தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு தான். எங்களுடைய கோரிக்கைகள் குறித்து, தெளிவாக உள்ளோம். நீட் தேர்வுக்காக நாங்கள் யாரும் கையெழுத்திடவில்லை.
இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று நாங்கள் வாதாடி இருக்கிறோம். உச்சநீதிமன்றம் நீட் தேர்வை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. மு.க ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார் ஆனால் எந்த மாநில முதலமைச்சராவது அதற்கு பதிலளித்தார்களா ? அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு மாநிலம் மட்டும் எதிர்த்து போராடி அதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது அதிமுக அரசு தான்.
அதே நேரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 7.5% இட ஒதுக்கீடும் கொண்டு வந்துள்ளோம். இன்று 540 ஏழை குழந்தைகள் நீட் தேர்வின் மூலமாக மருத்துவ படிப்பு படிப்பதற்கு காரணம் எடப்பாடி அரசு தான். ஜெயலலிதா ஆலகால விஷத்தை தொண்டையில் வைத்துக்கொண்டு பொது மக்களுக்கு அமிர்தம் வழங்கியவராக இருந்தார்’ என்று கூறினார்.