துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது 10 நாள் அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய கையோடு, ரஜினி பேச்சை கண்டிப்பதாக கூறியிருந்தார். இது அரசியல் களத்தில் மிகுந்த கவனம் பெற்றது. 

இந்நிலையில் பழைய ஃப்ளாஷ்பேக்கை சொல்லி அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர். ரஜினி ஆதரவால் 1996 சட்டமன்ற தேர்தலில் திமுக - தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த அலையில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். இதனால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக கருதப்பட்டது. அந்த தேர்தலில் ரஜினியின் வாய்சும் பெரும் பங்காற்றியது. ரஜினியும், ஜெயலலிதாவும் எதிரெதிர் துருவங்களாக இருந்த அந்த காலத்தில், ரஜினியை போற்றி, அவரது ரசிகர்களின் ஆதரவோடு, ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் முதல் வெற்றியை பார்த்தார் என்றால் நம்ப முடிகிறதா? நம்பிதான் ஆக வேண்டும். ஒரு சின்ன பிளாஷ்பேக்...

1996ம் ஆண்டு வரை அதிமுகவில் சாதாரண நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகரசபைத் தலைவர் பதவிக்கு போட்டியிட அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்தது. என்ன செய்தாவது, இதில் வெற்றி பெற வேண்டும் என முடிவெடுத்தார். அம்மாவின் பெயரை சொல்லி ஓட்டு கேட்டால், நம்மை மண்ணை கவ்வ விட்டு விடுவார்கள்; எனவே ரஜினியை புகழ்ந்து பேசி அவரது ரசிகர்களின் ஓட்டுகளை அள்ளிவிட வேண்டும் என கணக்கு போட்டார்.

ரஜினி ரசிகர்களை சந்தித்து, ‘நானும் தலைவர் ரசிகர்தாம்ப்பா...’என்று கூறியதோடு, அவரை வானளாவ புகழ்ந்து தள்ளினார். இதனால் நெகிழ்ந்துபோன ரஜினி ரசிகர்கள், அவரை ஜெயிக்க வைக்க முடிவு செய்தனர். பெரியகுளத்தில் வீதி, வீதியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாக்கு சேகரித்தனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அச்சடித்த போஸ்டர்களில் ஜெயலலிதா படத்தைக் காட்டிலும் ரஜினியின் படமே அதிகமாக இருந்தது. போஸ்டர்களை ரஜினி ரசிகர்கள் மூலம் ஒட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக தோற்றாலும், பெரியகுளத்தில் ரஜினி ரசிகர்கள் ஆதரவால் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கனியை ருசித்தார்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வரை டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம், நகர்மன்றத் தலைவர் தேர்தலில் தோற்றால், திருப்பூர் பனியன் கம்பெனிக்குதான் வேலைக்கு போக வேண்டும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், ரஜினி ரசிகர்களின் தயவால் வெற்றி பெற்றார். அரசியலில் இன்று உச்சத்தில் இருக்கும் ஓ.பி.எஸ்.சுக்கு ரஜினி ரசிகர்கள் நகரசபை தேர்தலில் தேடித்தந்த வெற்றியே முதல்படியாக அமைந்தது’’எனத் தெரிவித்து ஓ.பி.எஸ் ரஜினிக்கு எதிராக கருத்துக் கூறியதற்கு சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.