திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் அண்மைக்காலமாக பதற்றம், பரபரப்பு, எரிச்சலை அவ்வப்போது வெளிக்காட்டி வருவதன் பின்னணியில் ரஜினியின் அரசியல் வருகை இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் தலைமை கழக பேச்சாளரும், திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்தவருமான தமிழன் பிரசன்னா நாகை மாவட்டங்களில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த பொதுக்கூட்டங்களில் தமிழன் பிரசன்னா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய பேச்சுகள், மூன்றாம் தர பேச்சாளர்களை மிஞ்சும் வகையில் இருந்தது.

 

சிஏஏ எதிர்ப்பு குறித்தும் அதற்கான காரணத்தையும் விளக்கி பேசுவார் என்று எதிர்பார்த்தால் பிரசன்னாவின் பேச்சு முழுக்க முழுக்க ரஜினியை மையமாக வைத்தே இருந்தது. அதிலும் ரஜினியை அவன், இவன் என்று ஒருமையில் ஏக வசனத்தில் பேச ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் போயஸ் கார்டன் கம்மநாட்டி என்று ரஜினியை கொச்சையாக பேச, அங்கிருந்த இஸ்லாமியார்களே பிரசன்னாவின் பேச்சை ரசிக்கவில்லை.

இதே போல் தமிழகத்தில் கடந்த வெள்ளியன்று இஸ்லாமியர்கள் தமிழகத்தில் போராட்டத்தை தொடங்கிய நிலையில் விபத்தில் இறந்த ஒருவரின் புகைப்படத்தை எடுத்து போராட்டத்தில் உயர்நீத்தவர்கள் என்று திமுகவின் தருமபுரி எம்பி செந்தில் வதந்தியை பரப்பினார். மேலும் ரஜினி இப்போது வீதிக்கு வந்து போராடுவாரா? என்று திமுக எம்பி செந்தில் கேள்வியும் எழுப்பியிருந்தார். போதாக்குறைக்கு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக எம்பி ஆர்எஸ் பாரதி பிராமணர்களை நாய்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்றும் மிகவும் ஆவேசமாக பேசியிருந்தார். போதாக்குறைக்கு தமிழக ஊடகங்களை மும்பை ரெட் லைட் ஏரியா என்றும் அத்துமீறியிருந்தார் ஆர்.எஸ்.பாரதி. இப்படி திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தன்னிலை மறந்து பதற்றத்துடனும் பரபரப்புடன் சமீப காலமாக பேச ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் தேர்தல் தான் என்று கூறுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற திமுகாவால் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாதி இடங்களைத்தான் வெல்ல முடிந்தது.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த சூழலில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இப்படி தேர்தலுக்கு முன்னதாக கள நிலவரம் மாறி வருவது திமுக மேலிடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள். மேலும் திமுகவிற்கு வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோர் டீம் களம் இறங்கியிருப்பதாலும் திமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளை நாம் எப்படி செய்வது என்கிற ஒரு சந்தேகம் வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

போதாக்குறைக்கு ரஜினியும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளார். எடப்பாடி பழனிசாமியை எதிர்கொண்டே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது. ரஜினியும் தேர்தல் களத்திற்கு வந்துவிட்டால் திமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்குமா? என்கிற சந்தேகம் அந்த கட்சியினருக்கே உள்ளது. இதனால் ஏற்பட்ட எரிச்சலின் வெளிப்பாடகவோ கிடைக்கும் இடங்களில் எல்லாம் ரஜினியை திமுகவினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள்.