fodder bribe case judgement will be announce tomorrow said court
கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் உள்ளிட்ட 15 குற்றவாளிகளுக்கான தண்டனை இன்றும் அறிவிக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் லாலுவின் ஆதரவாளர்கள் அதிகளவில் கூடியதால் தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஷ்ராவை நீதிமன்றம் விடுதலை செய்தது.
பீகார் முதல்வராக லாலு பிரசாத் பதவிவகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 1994-95-ல் சைபாசா கருவூலத்திலிருந்து 78 போலி ஒதுக்கீடு கடிதங்கள் மூலம் ரூ.37.7 கோடி ஊழல் நடந்ததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக லாலு பிரசாத் மீது சிபிஐ மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்தன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்தது. மேலும் ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் லாலு ஜாமீனில் வெளிவந்தார்.
இதனிடையே ஒரே புகாரின் கீழ் வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி லாலு பிரசாத் தரப்பில், ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. குற்ற நடைமுறைச் சட்டத்தின் படி, ஒரே குற்றத்திற்காக ஒருவர் மீது இருமுறை குற்றம்சாட்ட முடியாது என்று கூறி லாலு மீதான விசாரணையை நிறுத்துமாறு ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், அரசு கருவூலங்களிலிருந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் பணம் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் இரண்டு முறையும் நிதி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களும் பயனடைந்த நபர்களும் வேறு வேறு என சிபிஐ தெரிவித்தது.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அரசு கருவூலத்திலிருந்து பணம் எடுத்தது மற்றும் ஆவணங்களில் முறைகேடு செய்தது தொடர்பாக லாலு உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத், ஜெகன்நாத் மிஷ்ரா உட்பட 34 பேர் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இந்த வழக்கை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின்போதே 11 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒருவர் சிபிஐ தரப்பு அப்ரூவராக மாறிவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் லாலு பிரசாத் உட்பட 15 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனை விவரத்தை வரும் ஜனவரி 3ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தது.
அதன்படி, நேற்றைய தினம் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், இன்றைய தினமும் தண்டனை விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
மீண்டும் தண்டனை விவரங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளைய தினம் கால்நடை தீவன ஊழல் வழக்கின் குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் லாலுவின் ஆதரவாளர்கள் அதிகளவில் கூடியதால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
