fishermen meeting with kamal hassan
மீனவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்க இருப்பதாக தெரிவித்திருந்த கமலஹாசன், அவர்களை நீண்ட நேரம் காக்க வைத்து 2 நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு சென்றதால் மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். காலை 7.35 மணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்துக்கு சென்ற கமல், அவரின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அப்துல் கலாமின் குடுப்த்தினர் கமலுக்கு வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து அப்துல் கலாம் படித்த பள்ளியில் உள்ள மாணவர்களை சந்தித்து உரையாட திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு அரசு அனுமதி அளிக்காததால் அத்திட்டத்தை ரத்து செய்தார்.
இது கமலுக்கும், அவரது ரசிகர்களுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. இதையடுத்து அந்த பள்ளி முன்பு சிறிது நேரம் நின்று வணங்கிவிட்டு தனியார் விடுதிக்கு சென்ற கமலஹாசன், அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து திருமண மண்டபம் ஒன்றில் மீனவர்களை சந்தித்து அவர்களது குறைகள் மற்றும் கருத்துக்களை கேட்பதாக இருந்தார், இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ஆனால் கமல்ஹாசன் அங்கு வந்து இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார், மீன் பிடித் தொழில் முக்கியமான தொழில் என்றும் அதனை பாதுகாப்பது நமது கடமை என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு நாள் வந்து உங்களை சந்திப்பதாகவும், அப்போது குறைகள், கருத்துக்கள் குறித்து பேசுவோம் என்று கூறிவிட்டு கமல் அங்கிருந்து சென்று விட்டார்.
இதனால் நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களிடம் கமல் சரியாக பேசவில்லை என்று மீனவர்கள் அதிருப்தியடைந்தனர். தங்களை கமல் ஏமாற்றிவிட்டதாக மீனவர்கள் புலம்பித் தவித்தனர்.
