ந்த டிசம்பர் 12ம் தேதி வர்தா புயல் சென்னையை கரை கடந்தது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்தன.
ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசை வீடுகள் காற்றில் பறந்து சென்றன. கட்டிடங்கள் இடிந்தன. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனர்.

குறிப்பாக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். விடுகள், உடைமைகள் இழந்தனர். மீன் பிடி தொழிலுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான கட்டு மரங்கள், நூற்றுக்கணக்கான விசை படகுகள்,, வலைகள் சேதமாயின.
இந்நிலையில், 2017ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 23ம் தேதி, கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதைதொடர்ந்து நேற்று விவாதம் நடந்தது.
கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, “வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு முழு அளவில் நிவாரணம் வழங்கவில்லை. பலருக்கு இதுவரை நிவாரண தொகை கிடைக்கவில்லை. அந்த நிவாரணத்தை வழங்க அரசு முன்வருமா?” என கேட்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘’வர்தா புயலால் திருவொற்றியூர் தொகுதியில் தூண்டில் வளைவு கற்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு ரூ.19 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட யாராவது விடுபட்டு இருந்தால், அதுபற்றி தெரிவிக்கலாம். நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
