கொங்கு மண்டலத்தில் முதல் விக்கெட்..! செங்கோட்டையன் வலது கரத்தை தூக்கிய திமுக..!
நேற்று பிற்பகலில் அதிமுகவில் இருந்து அக்கட்சியின் வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் நீக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேருமே ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதிலும் சிந்து ரவிச்சந்திரன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வலது கரமாக செயல்பட்டவர்.
கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல்கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை திமுக வளைத்துள்ளது.
நேற்று பிற்பகலில் அதிமுகவில் இருந்து அக்கட்சியின் வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி உள்ளிட்ட 5 பேர் நீக்கப்பட்டனர். இவர்கள் ஐந்து பேருமே ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அதிலும் சிந்து ரவிச்சந்திரன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வலது கரமாக செயல்பட்டவர். அதுமட்டும் அல்லாமல் முந்தைய அதிமுக ஆட்சியில் சிட்கோ தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் சசிகலா இருந்தவரை கார்டனுக்கும் நெருக்கமானவர் என்று கூறுகிறார்கள். தினகரன் உள்ளிட்டோருடன் எந்த நேரத்திலும் பேசும் அளவிற்கு செல்வாக்குடன் இருந்தவர்.
சசிகலா சிறை செல்வதற்கு முன்னதாக செங்கோட்டையன் அமைச்சராக்கப்பட்டார். அதில் இவரது பங்கு அதிகம் என்றும் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு செல்வாக்குடன் இருந்த சிந்து ரவிச்சந்திரன், அமைச்சர் செங்கோட்டையனுடன் எப்போதும் வலம் வருபவர். இதன் பிரதிபலனாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிந்து ரவிச்சந்திரன் மாநில வர்த்தக அணிச் செயலாளர் எனும் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். அதோடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவும் சிந்து ரவிச்சந்திரன் பெரு முயற்சி மேற்கொண்டார். இவருக்கு பெருந்துறை அல்லது ஈரோடு மாநகருக்குள் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் சிந்து ரவிச்சந்திரனுக்கு சீட் இல்லை என்று கூறிவிட்டார்கள். இருந்தாலும் கூட தேர்தல் பணிகளில் செங்கோட்டையனுக்காக மிகத் தீவிரமாக சிந்து ரவிச்சந்திரன் களப்பணியாற்றியுள்ளார். இதனிடையே ஆட்சி மாறிய நிலையில் தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு காரணமே செங்கோட்டையனின் லாபி தான் என்று ரவிச்சந்திரன் தெரிந்து கொண்டதாக கூறுகிறார்கள். இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் களப்பணியாற்றும் அதிமுக நிர்வாகிகளுக்க திமுக வலை விரித்தது. அதில் முதலில் சென்று சிக்கியது சிந்து ரவிச்சந்திரன் தான் என்கிறார்கள்.
நல்ல பதவி, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என ஏராளமான வாக்குறுதிகளுடன் சிந்து ரவிச்சந்திரனை திமுக தன்வசமாக்கியுள்ளது. இதே போல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கந்தசாமியும் திமுகவில் இணைந்துள்ளார். இது கொங்கு மண்டலத்தில் கவனம் செலுத்தும் திமுகவிற்கு ஒரு பூஸ்ட் போன்ற மூவ் என்கிறார்கள். அதே சமயம் தேர்தல் சமயத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் செங்கோட்டையன் – சிந்து ரவிச்சந்திரன் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் தற்போது வேறு கட்சிக்கு சிந்து செல்லும் அளவிற்கு விவகாரமாகியுள்ளது என்று லோக்கல் கரை வேட்டிகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.