கர்நாடக மாநிலத்தில் சினிமா நடிகர்களுக்கு இணையாக ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு ரசிகர்கள் இருந்தனர். அவரை கர்நாடக மக்கள் தங்கள் மாநிலத்தின் சிங்கம் என்று அழைத்தனர். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக என யார் கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் இந்த ஐபிஎஸ் அதிகாரி முக்கிய பதவியில் இருப்பார். இதற்கு காரணம் அவரது நேர்மை மற்றும் அதிரடியாக நடவடிக்கைகள். இதில்  குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால் அந்த அதிகாரி தமிழகத்தின் கரூரை சேர்ந்தவர். அவர் வேறு யாரும் இல்லை நேற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலை தான்.  கடந்த ஆண்டு ஐபிஎஸ் பணியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துவிட்டு கரூர் வந்து இயற்கை விவசாயம் செய்து வந்தார் அண்ணாமலை. இவர் பதவி விலகிய போது தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சரே வேண்டுகோள் விடுத்தார். ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்து பதவியை உதறவிட்டு விவசாயத்தை கவனிக்க வந்தார். 

அப்போதே அவர் தமிழகத்தில் அரசியிலில் ஈடுபடவே ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பேச்சுகள் அடிபட்டன. மேலும் அண்ணாமலை ரஜினியின் அரசியல் கட்சியில் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று அவர் பாஜகவில் இணைந்தார். ஆனால் முதல் நாளிலேயே சில தர்மசங்கடங்களை அண்ணாமலை சந்தித்ததாக கூறுகிறார்கள். அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்த போதே பாஜகவில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை  முடித்திருந்தார். அப்போதே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிகத்தில் தனது  அரசியல் திட்டத்தை எடுத்துக்கூறி அதற்கு அவரது ஆசியையும் பெற்றே அண்ணாமலை பதவியில்  இருந்து விலகினார். மேலும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போது அவரது முன்னிலையில் அண்ணாமலை பாஜகவில் இணைய ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமித் ஷா வாக்குறுதி அளித்ததாக சொல்கிறார்கள்.

 இதனை தொடர்ந்து அந்த நாளுக்காக அண்ணாமலை காத்திருந்தார். ஆனால் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு தமிழகத்தில்  எந்த அரசியல் திட்டங்களும் இல்லை என்று தெரிந்த பிறகு அமித் ஷாவை சென்னை வரவழைத்து  அவர் முன்னிலையில் பாஜகவில் இணைய அண்ணாமலை முயற்சி மேற்கொண்டார். அதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் டெல்லி சென்று அண்ணாமலை பாஜகவில் அமித் ஷா முன்னிலையில் இணைய தேதி கொடுக்கப்பட்டது.இந்த நிலையில் தான் அமித் ஷா திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனால் அண்ணாமலை பாஜகவில் இணைவதற்கான நாள் தள்ளிக் கொண்டே சென்றது. எனவே பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணையுமாறு அண்ணாமலைக்கு சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டன.

இதற்காக டெல்லி சென்று மூன்று நாட்கள் காத்திருந்தும் அண்ணாமலையால் நட்டாவை சந்திக்க முடியவில்லை என்கிறார்கள்.  நட்டா பீகார் சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்ததால் அண்ணாமலைக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஒரு வழியாக நேற்று காலை  11 மணிக்கு பாஜக தலைமையகத்திற்கு வரும் நட்டா முன்னிலையில் அண்ணாமலை பாஜகவில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டது.  ஆனால் நட்டா நேற்று கட்சி அலுவலகம் வரும் திட்டம் ரத்தாகிவிட்டது.

இதனால் தவித்துப்போன அண்ணாமலை ஒரு வழியாக வேறு வழியே இல்லாமல் பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான முரளிதர் ராவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். முரளிதர் ராவ் வாரம் ஒரு முறை சென்னை வரக்கூடியவர். அவர் முன்னிலையில் பாஜகவில் இணைய எதற்கு  அண்ணாமலை டெல்லி செல்ல வேண்டும் என்று அக்கட்சியினர் சிலரே பேசி சிரித்துள்ளனர். பிறகு ஒரு வழியாக நட்டாவை சந்தித்து வாழ்த்து மட்டும் பெற்று திரும்பியுள்ளார் அண்ணாமலை.  என்னதான் போலீஸ் வேலையில் சிங்கம் என்று பெயர் எடுத்தாலும் அரசியல் என்று வந்துவிட்டால் என்ன மாதிரியான அனுபவங்களை  எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று முதல் நாளே அண்ணாமலைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது பாஜக.