தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 137 பேர் போட்டியிடுகிறார்கள்.
தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 4 தொகுதிகளிலும் போட்டியிட ஏப்ரல் 22-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 4 தொகுதிகளிலும் 256 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனுக்கள் பெறுவது ஏப்ரல் 29ம் தேதி முடிவடைந்த நிலையில், அதன் மீதான பரிசீலனை ஏப். 30-ம் தேதி நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதில் 152 மனுக்கள் எந்தப் பிரச்னையுமின்றி ஏற்கப்பட்டன. 104 மனுக்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நிராகரித்தனர். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் இருந்தது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட பிறகு 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தெரிய வந்துள்ளது.


இதன்படி 4 தொகுதிகளிலும் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதிகபட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேர் போட்டியிடுகிறார்கள். குறைந்தபட்சமாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேர் போட்டியிடுகிறார்கள். சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றத்தில் 37 பேரும் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்யாரெனத் தெரிந்துவிட்ட நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். மே19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.