அமைச்சராகாமல் என்னைத் தடுத்து ஒழிக்க நினைத்த பொம்பளை அவதான். அதானால்தான் நான் இப்போது சசிகலாவை எதிர்க்கிறேன் என்று கே.பி.முனுசாமி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் அமைச்சரும்,  தற்போதைய ராஜ்யசபா எம்.பியும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி முனுசாமி.

இந்நிலையில் சசிகலா குறித்து அவர் பேசுகையில், ‘’சசிகலாதான் எல்லாத்துக்கும் காரணம். என் 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் யாரிடமும் ஒரு பைசா கூட லஞ்சம் கேட்டு கையேந்தியது இல்லை. நானொரு போராளி.

சசிகலாவை எதற்கு எதிர்க்கிறேன் தெரியுமா? அன்றைக்கு என்னை எதிர்த்து வந்த பொம்பள, நான் அமைச்சராக இருக்ககூடாது என அம்மாவிடம் சண்டை போட்டவ. எனக்கும் சசிகலாவுக்கும் கடும் போட்டி இருந்தது. அந்த போட்டியில் அவ ஜெயிச்சா, நான் தோற்றேன்.

அம்மா என் பக்கம் இருந்தார். என் மீது பாசமாக இருந்தார். அவர் என்னை விடவில்லை. தேர்தலில் போட்டியிட எனக்கு சீட்டு கொடுத்தார். 2016 ல் அம்மா எனக்கு வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட சீட்டு கொடுத்தார். ஆனால் நான் வெற்றி பெற்று விடுவேன் என்று நினைத்த சசிகலா என்னை பென்னாகரம் தொகுதிக்கு மாற்றினார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா  இருந்தபோது கே.பி.முனுசாமி ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்னர் அவரது மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓ.பி.எஸ் ஆதரவாளராக மாறினார். பின்னர் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தபோது துணை ஒருங்கிணைப்பாளரானார். சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தபோது அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்கக்கூடாது என முதல் குரல் எழுப்பியவர் இந்த கே.பி.முனுசாமிதான்.