அப்பா திராவிட மாடல் ஆட்சி.. மகன் திராவிட மாடல் திரைப்படம்.. உதயநிதிக்கு அன்பில் மகேஷ் பாராட்டு.
தந்தை திராவிட மாடல் ஆட்சியை தருகிறார்கள் மகன் திராவிட மாடல் திரைப்படத்தை தருகிறார் என உதயநிதி ஸ்டாலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார்.
தந்தை திராவிட மாடல் ஆட்சியை தருகிறார்கள் மகன் திராவிட மாடல் திரைப்படத்தை தருகிறார் என உதயநிதி ஸ்டாலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டியுள்ளார். உதயநிதி நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்யா மற்றும் ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி அவர்கள் அப்பாவுக்கு கட்டுப்பட்ட பிள்ளை, தாத்தாவின் நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பை பெற்று திரைப்படத்திற்கு வைத்துள்ளார்.
தாத்தா வைத்த பெயரை மட்டும் வாங்கினால் போதாது, தாத்தா மாதிரி பெயர் எடுப்பார், தாத்தா வகித்த டைட்டிலையும் எதிர்காலத்தில் அவர்கள் எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்பா திராவிடமாடல் ஆட்சி தருகிறார் மகன் திராவிட மாடல் திரைப்படம் தருகிறார் என அவர் பேசினார். அதை தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் முதல் நன்றி எனது தாத்தாவுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். ஆர்டிகள் 15 படத்தை பார்த்து இரண்டு நாட்கள் கேட்டேன், நிறைய இயக்குனர்களை பார்த்து இந்த படத்தை ரீமேக் செய்ய கேட்டேன் பலர் பயந்து விட்டனர். அருண் ராஜா இயக்கிய கானா படத்தை பார்த்துதான் இந்த படத்தை இயக்க கேட்டேன் உத்திரபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதை தமிழ்நாட்டிற்கு ஏற்ப மாற்றங்கள் செய்துள்ளோம். ஆனால் நாம் உத்தரப் பிரதேசத்தை காட்டிலும் 30 ஆண்டுகள் முன்னாலுள்ளோம். அதற்கு திராவிட மாடல் தான் காரணம், அதற்கு நமது தலைவர்கள் அண்ணா கலைஞர் தான் காரணம். இந்த தலைப்புக்காக எனது அப்பாவிடம் கேட்டேன் படத்திற்கு தலைப்பு நெஞ்சுக்கு நீதியா என்ன படம் என்று கேட்டார், சரி பார்த்து பண்ணுங்க தப்பா எதுவும் பண்ண கூடாது என்றார். அந்த பதட்டத்துடன் தான் படத்தை எடுத்தோம். இந்த படத்திற்கும் அன்பில் மகேஷ்க்கும் சம்பந்தமில்லை. ஆனால் எனக்கும் அவருக்கும் சம்பந்தம் உள்ளது. சினிமாவில் சோர்வாக இருந்தாலும் அரசியலில் சோர்வாக இருந்தாலும் மகேஷ் கிட்ட பேசினால் இல்லை பார்த்தாலே போதும் எனக்கு சார்ஜ் போட்ட மாதிரி இருக்கும் என பேசினார்.