மதுபோதையில் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை விழுப்புரம் அருகே அரங்கேறியுள்ளது. இந்த பாதகமான செயலை செய்த  தந்தையை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். 42 வயதாகும் இவர் மரம் ஏறும் கூலித் தொழிலாளி. இவரது மகள் அதே ஊரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் கல்வி படித்துவருகிறார்.

தாயும் கூலி வேலைக்குச் செல்பவர் என்பதால் பெரும்பாலான நேரம் சிறுமி வீட்டில் தனியாகவே இருந்திருக்கிறார். கடந்த 3 மாதங்களாக சிறுமிக்கு மாதவிடாய் பிரச்னை இருந்ததால் அவரது தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே பரிசோதித்து பார்த்தபோதும் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

அதுகுறித்து விசாரித்தபோது, மூன்று மாதத்திற்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பிறகு பலமுறை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அச்சிறுமியின் தாய்.தொடர்ந்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், கலிவரதனை போக்சோ வழக்கின் கீழ் கைது செய்த போலீஸார் மருத்துவ பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.