சென்னையில் நாளை திமுக, தோழமை கட்சிகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் திட்டமிட்டப்படி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என திமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

டெல்லியில் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நாளை  வள்ளுவர்  கோட்டத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் போராட்டங்கள் நடைபெறும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க திமுக சார்பில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் சென்னையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி மறுக்கப்பட்டது. இது தொடர்பான கடிதமும்  திமுக.வுக்கு முறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி நாளை திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடத்த திமுக மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.