விவசாயிகள் யாரும் வறட்சியால் உயிரிழக்கவில்லை அது எதிர்கட்சிகள் சதி , நோய் காரணமாகவே அவர்கள் உயிரிழந்தனர் என்று பேட்டி அளித்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் , எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு சுமார் 50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முற்றிலும் அழிந்து போய்விட்டது. தென்னை கருகதொடங்கிவிட்டது. மிகப்பெரிய பேரழிவை தமிழக விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.


 விவசாயிகளின் போராட்டத்திற்கு மதிப்பளித்து, தமிழக அரசே பேச்சுவார்த்தை நடத்தி அதன் அடிப்படையில் அமைச்சர்கள் கொண்ட உயர்மட்டக்குழு மாநிலம் முழுமையும் பார்வையிட்டு சேதங்கள் குறித்து ஆய்வு செய்துவருது வரவேற்கதக்கது. 
ஆனால் திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விவசாயம் பாதிப்பால் எந்த விவசாயியும் சாகவில்லை என்றும், விவசாயிகளின் இறப்பை கொச்சைபடுத்தியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கதக்கது. 
தமிழகம் வறட்சியால் பற்றி எரிகிறபோது இவரது பேச்சு எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்பது போல தமிழகத்தில் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சு தமிழக அரசின் நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்திடும் வகையிலும், மக்கள் மத்தியில் நம்பக தன்மையை இழக்கும் வகையிலும் உள்ளது. எனவே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும் என பி.ஆர் .பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். 


இதே போன்று டெல்டா பாசன விவசாயிகள் சங்க ஒருகிணைப்பு குழுவும் அமைச்சர் சம்பத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, 
ஒரு புறம் நீதிக்கு புறம்பாக காவிரியில் தண்ணீர் தராது கர்நாடகம் பழி தீர்க்கிறது. மறு புறம் மழை பொய்த்து பயிர் கருகுகிறது இந்த நிலையில் அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாய் உள்ளது. 
ஊடகங்களில் வரும் விவசாயிகள் சாவு பொய்யான செய்தியென்றால். மறைந்த  ஜெயலலிதா அம்மையார் மறைவால் உயிர் நீத்தவர்கள் என பட்டியலிட்டு வந்தவையும் பொய் தான் என அமைச்சர் கூறுகிறாரா? 
 விசாயிகளின் மரணத்தை எதிர்கட்சியினர் பெரிதாக்குவதாக கூறுகிறாரே ஊடகங்கள் அனைத்தும் எதிர்கட்சிகளுடையதா ?  என்பதை விளக்கவேண்டும் அத்தோடு இறந்த விவசாயிகளின் வீட்டிற்க்கே டெல்டா மாவட்ட விவசாயபாசன ஒருங்கிணைப்பு சங்கம் அமைச்சரை அழைத்து சென்று உண்மை நிலையை காண்பிக்க தயாராய் உள்ளது. 
தானும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதைமறந்து பேசும் அமைச்சரின் செயல் வேதனையளிக்கிறது. தனது பேச்சை அமைச்சர் வாபஸ் பெற வேண்டும் , இவ்வாறு தெரிவித்துள்ளனர்.