டஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் வாங்க வண்ண டோக்கன்கள் வழங்கப்பட்டது. என்னதான் ஒரிஜினல் கொடுத்தாலும் நாங்கள் அதையும் போலியாக அச்சடிப்போம் என நிருபித்த குடிமகன் "திருடத்தெரியாதவன் தலையாரி வீட்டில் திருடன" கதையாக 17பேர் மாட்டிக்கொண்ட சம்பவம் கடலூரில் அரங்கேறியிருக்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மே 7ம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள், மே 8ம் தேதி மாலையுடன் மூடப்பட்டன. சென்னை ஐகோர்ட் உத்தரவின் காரணமாக கடைகள் மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.

 கொரோனா தொற்று அதிகமுள்ள சென்னை திருவள்ளுர் மாவட்டங்களை தவிர தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 6மணிக்கே குடிமகன்கள் குவிந்து விட்டார்கள்.கூட்டத்தை கட்டுப்படுத்ததுவதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.கடலூரில் காலை 7 மணி முதலே மது வாங்க டாஸ்மாக் கடைகள் முன்பு ஆயிரக்கணக்கில் கூட்டம் குவிந்தது.இதனையடுத்து, டாஸ்மாக் கடைகளில் குவியும் கூட்டத்தினை கட்டுப்படுத்தக் கடை ஒன்றிற்கு 500 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.மேலும் காவல் துறையினர் ஒரு மணி நேரத்திற்கு 70 நபர்கள் என வரிசையாக மது வாங்க அனுமதித்து வந்தனர்.

இந்நிலையில், கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்து டோக்கன் இல்லதாவர்தளிடம், கள்ளத்தனமாக டாஸ்மாக் டோக்கனை 200 ரூபாய்க்குச் சிலர் விற்பனை செய்துள்ளனர்.இதனையறிந்த, காவல் துறையினர் ஆய்வு செய்ததில், கள்ளத்தனமாக டோக்கன் விற்பனை செய்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் உட்பட 17 நபர்களைக் கைது செய்துள்ளது.