சென்னையில் நடிகர் கமல் வீட்டு முன்பு நடைபெற்ற நிர்வாகிகள் அறிவிப்பு நிகழ்ச்சிக்கு கூட்டத்தை கூட்ட முடியாமல் கமல் கட்சி நிர்வாகிகள் தவியாய் தவித்துப் போயினர். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அண்மையில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்தது. இதனை தொடர்ந்து கட்சிக்கான துணைத்தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் கமலை கேட்டுக் கொண்டது. இதனை அடுத்து நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பணியில் கடந்த ஒரு வார காலமாக கமல் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். நிர்வாகிகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கொடியை ஏற்றி நிர்வாகிகளை அறிவிப்பது என்று கமல் முடிவெடுத்தார்.

இதற்காக நேற்று (12-07-2018) அன்று கமல் வீட்டு முன்பு காலை பத்து  முப்பது மணி அளவில் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. கமல் வீட்டு வாசலில் சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. காலை ஒன்பது மணிக்கு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அங்கு வந்துவிட்டனர். செய்தியாளர்களும் ஏராளமானோர் கமல் வீட்டு முன்பு கூடினர். ஆனால் தொண்டர்கள் தான் வர ஆரம்பிக்கவில்லை. நிர்வாகிகள் உடனடியாக சென்னையில் உள்ள முக்கிய கட்சி பிரமுகர்களை தொடர்பு கொண்டு கமல் வீட்டுக்கு உடனடியாக சில தொண்டர்களை அனுப்பி வைக்குமாறு கேட்கத் தொடங்கினர்.

ஆனால் திடீரென ஆட்களை கேட்டதால் என்ன செய்வது என்று மக்கள் நீதி மய்யம் பிரமுகர்களுக்கு தெரியவில்லை. பின்னர் ஒருவழியாக சிலரை பிடித்து கையில் கட்சிக் கொடிகளை கொடுத்து கமல் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்படியும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட காலை 10.30 மணி வரை சுமார் 100 பேர் மட்டுமே அங்கு வந்திருந்தனர்.

இதனால் தவித்துப் போன மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அங்கும் இங்குமாக ஓடி ஒரு 11.15 மணி அளவில் ஒரு 200 பேரை அழைத்து வந்து அங்கு நிறுத்தி வைத்தனர். பின்னர் கமலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் காலை 11.20 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது கட்சியின் தலைவராக தான் செயல்பட உள்ளதாகவும், துணைத் தலைவராக ஞானசம்பந்தமும், பொதுச் செயலாளராக அருணாச்சலமும், பொருளாளராக சுரேசும் செயல்படுவார்கள் என்று கமல் அறிவித்தார்.