ஜெயலலிதாவின் மரணம் மட்டுமல்ல.. அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைகளிலும் மர்மம் நீடித்து வந்த நிலையில் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் அதிரடி தகவலுடன் வெளியிட்டுள்ள ஆதார வீடியோக்கள் அதிமுக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது. 
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது போயாஸ்கார்டன் இல்லத்தில் தங்கி இருந்தாலும் மாதக்கணக்கில் ஓய்வெடுப்பது கொடநாடு எஸ்டேட் பங்களாவில்தான். அவர் மறைந்த பிறகு அந்த கொடநாட்டில் நடந்த மர்ம முடிச்சுகள் இப்போதுவரை அவிழவில்லை. 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் எஸ்டேட் காவலாளியான ஓம்பகதூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இருந்தது யார் என்கிற குழப்பம் நீடித்து வந்த நிலையில், தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசினார். 

அப்போது, ’கொடநாட்டில் நடந்த கொலைக்கான பின்னணி தகவல்களை சேகரித்துள்ளேன். இதன் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடத்தியவர்களிடம் பேசிய ஆதாரங்களையும் வைத்துள்ளேன். எஸ்டேட்டில் உள்ள கட்டத்திற்கு 2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை கைப்பற்றவே இந்தக் கொள்ளை நடந்துள்ளது. இதில் எடப்பாடியின் சதி அடங்கி இருக்கிறது’’ என அவர்  தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பின்னர், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையில் ஈடுபட்ட சயோன் உள்ளிட்ட இருவரையும் செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேச வைத்தார் மேத்யூ. அப்போது பேசிய சயோன், ’’2017ல் ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சில ஆவணங்களை கேட்டு அனுபியதாக ஓட்டுநர் கனகராஜ் தெரிவித்தார். அதனை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் ஓட்டுநர் கனராஜ் என்னிடம் கேட்டார். கொடநாடு எஸ்டேட்டில் டிரைவராக இருந்த கனகராஜ் எனக்கு 5 ஆண்டுகளாக என்னிடம் பழகி வந்தார். அப்போது என்னை அனுகிய அவர், ’கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கியமான டாக்குமெண்டுகளை எடுக்க வேண்டும் முதல்வர் பழனிசாமி கேட்டுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு எனக்கு உதவ வேண்டும்’ எனக் கேட்டார் கனகராஜ். 

அதன்படி நாங்கள் அந்த டாக்குமெண்டுகளை எடுக்க உதவுவதாக கூறினோம். இதற்காக கேரளாவில் இருந்து 10 பேரும், டிரைவர் கனகராஜும் எஸ்டேட்டுக்குள் நுழைந்தோம். அப்போது சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாது என கனகராஜ் கூறினார். இதை நம்பி எஸ்டேட்டுக்குள் நுழைய முயன்றபோது காவலாளி ஓம்பிரகாஷ் தடுத்தார். அவர் குச்சல் போட்டு விடக்கூடாது என்பதற்காக கைகால்களைக் கட்டி வாயை மூடினோம். ஆனால் அவர் மூச்சு முட்டி இறந்து விட்டார். அவரை கொல்ல வேண்டும் என இதை செய்யவில்லை. பின்னர் உள்ளே நுழைந்து கனகராஜ் கட்டடத்திற்குள் இருந்த முக்கிய ஆவணங்களை கனகராஜ் அள்ளி வந்தார். அதை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்போவதாக சொல்லிச் சென்ற அவர் அடுத்த 5 நாட்களில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது கார் மோதி பலியாகி விட்டார். நாகராஜ் கொல்லப்பட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருக்கிறது.

 

ஆனால், எடப்பாடி கொடுப்பதாக சொன்ன அந்த 5 கோடி ரூபாய் பணம் எங்களுக்கு வந்து சேரவில்லை. பிறகு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றோம். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது’’ என அவர் தெரிவித்தார்.  கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கும், கொள்ளைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக வெளியாகி உள்ள இந்தத் தகவல்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.