பிரதமர் மோடியின் ஆட்சியில், அமைச்சர்களும் அதிகாரிகளும் அதிகாரம் இல்லாதவர்களாக உள்ளனர். அனைத்து அதிகாரங்களும் மோடியிடம் மட்டுமே குவிந்துள்ளது தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையை சீர்செய்ய இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று ஏகத்துக்கும் பிரதமரை சாடியுள்ளார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்களில் ஒருவரான ரகுராம் ராஜன்.

 

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி வகித்த ரகுராம்ராஜன் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  இவ்வாறு கூறியுள்ளார்.  மோடி ஆட்சி பொறுப்பேற்றதும் அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவது,  எல்லா அதிகாரத்தையும் தன்னிடத்தில் எப்படி குவித்து கொள்வது என்பதில் மட்டுமே குறியாக இருந்தாரே தவிர,  இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக  அவர் திட்டமிடவில்லை என்று அவர் பேசியுள்ளார்.  குறிப்பாக  தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்துள்ளது என்றும்,  வளர்ச்சி குறித்த தெளிவான பார்வை இந்த ஆட்சியில் யாரிடமும் இல்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தற்போதைய அமைச்சர்களும் அதிகாரிகளும் அதிகாரமில்லாதவர்களாக உள்ளனர்.  அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்கவும் தயக்கம் காட்டுகின்றனர். பொருளாதார சீர்திருத்தத்தை செய்யு அரசிடம் மாற்று திட்டங்கள் இல்லை,  தொடர்ந்து  நிறுவனங்கள் பலவீனமாக்கபட்டு வருகின்றன,   இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் தற்போது பொருளாதார  மந்த நிலைக்கும் அதன் சரிவுக்கும் காரணம் என ரகுராம் ராஜன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

 

ஆக மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க முடியாத அரசாக மோடி அரசு திகழ்கிறது என்று தெரிவித்த அவர். அரசின் கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடையும் நிலைதான் உள்ளது என்றார்.  நாட்டின் வளர்ச்சி கடும் நெருக்கடியில் உள்ள நிலையில் அரசு தேர்தலுக்காக  மக்கள் நலத்திட்டங்களில் அதிக பணத்தை விரையம் செய்து வருவது  பிரச்சினையை அதிகபடுத்தும் என்றார். அவர் இறுதியாக கூறும் போது,  எப்போதும் சர்வாதிகாரிகளால் நிறுவனங்கள் பலப்படுகிறதா.? பலவீனமடைகின்றதா.? என்பதுதான் மிக முக்கியம் என அவர் பேசினார்.