தினகரன் கட்சியில் இருந்து பலர் வெளியேறுவார்கள் என்றும், உண்மையான அதிமுக என்பது போகப்போகத்தான் தெரியும் என்றும் அதிமுக முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன் கூறியுள்ளார். திவாகரன் அணியில் இணைந்து செயல்படப் போவதாகவும் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலா சகோதரர் திவாகரன், அம்மா அணி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். 

இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன், திவாகரன் தொடங்கியுள்ள அம்மா அணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திவாகரன் துவக்கியுள்ள அம்மா அணியில் இணைந்து பணியாற்றப் போகிறேன் என்றார். அம்மா அணி என்ற குழந்தை தவழ்ந்து மாரத்தான் ஓட்டமாக ஓடி வெற்றி பெறும் என்றார். அது மட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தையும், அரசாங்கத்தையும் காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.

காவிரி விவகாரத்தில், மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்று டிடிவி தினகரன் கூறி வருகிறார். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றால் டிடிவி தினகரன் உங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள். அப்படி செய்தால் நாங்கள் வாழ்த்துவோம். இல்லை என்றால் நீங்கள் தகுதியற்றவர்கள் ஆவீர்கள் என்று ராஜேஸ்வரன் கூறினார்.

டிடிவி தினகரன் கட்சியில் இருந்து பலர் வெளியேறுவார்கள். உண்மையான அண்ணா திமுக என்பது போகப்போகத்தான் தெரியும். பலர் பல கட்சிகளை துவக்குகிறார்கள். அது நீர்க்குமிழியாகத்தான் இருக்குமே தவிர ஒரு இயக்கமாக இருக்காது என்றார். 

அதிமுக தொண்டர்கள் அத்தனை பேரும் ஒன்றாக இருக்க வேண்டும். ஓர் அணியில் இருக்க வேண்டும். அந்த அணி திவாகரன் துவக்கியுள்ள அம்மா அணியாக மட்டுமே இருக்க முடியும். 

ஜெயலலிதா விட்டுச் சென்ற செயல்பாடுகளை, சகோதரர் திவாகரனுடன் இணைந்து செயல்படுத்த பாடுபடுவேன் என்று முன்னாள் எம்.பி. ராஜேஸ்வரன், செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.