தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற அதிமுக ஆதரவை அளித்ததையடுத்து கடையநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.நயினா முகமது அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

கடையநல்லூரை சேர்ந்தவர் நயினா முகமது. இவர் கடந்த 1996 முதல் 2001 வரை திமுகவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2004-ம் ஆண்டில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து, முதலில் அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளராக பதவி வகித்தார். தற்போது மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலராக பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், அவரது முகநூல் பக்கத்தில் அதிமுகவில் இருந்து விலகுவதாக பதிவிட்டுள்ளார். மேலும், அதிமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் மத்திய அரசின் செயல்பாடுகளை ஆதரிப்பதாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல், அதை ஆதரித்ததால் விலகல் முடிவை எடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்களுக்கு விவரங்களை அனுப்பி வைத்துள்ளேன். வேறு கட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.