எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசை கலைத்துவிடுவோம் என்று மிரட்டுபவர்கள் ஜெயலலிதாவை என்ன பாடுபடுத்தியிருப்பார்கள் என முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும்  செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

பொதுக்குழு மேடையில் அம்மா - புரட்சித் தலைவி அம்மா என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. கூட்டம் தொடங்கியதும்  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்துக்குத் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

பிறகு, அதிமுக பொதுக்குழுவில் மறைந்த ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  முன்னதாக, காப்போம் காப்போம் கட்சியை காப்போம் என பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்தவர்கள் முழுக்கம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து வந்திருந்த அனைவரையும், வரவேற்று, பேசிய வளர்மதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத நிலையில் 2வது முறையாக  பொதுக்குழுவைக் கூட்டியுள்ளதாகவும், அதிமுகவைக் காப்பாற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்னபாடுபட்டார் என்பது தொண்டர்களுக்குத் தெரியும் என கூறினார். 

தற்போது ஆட்சியைக் கலைப்போம் என கூறுபவர்கள் ஜெயலலிதாவை என்னப்பாடுபடுத்தியிருப்பார்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பிய வளர்மதி, ஆட்சியை வீழ்த்துவோம் என்று கூறுபவர்களிடம் சுயநலத்தைத் தவிர வேறு என்ன இருக்க முடியும் என்றார்.

ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவோம் என்று கூறுபவர்கள் தான் துரோகிகள் என்றும்  வளர்மதி பேசினார்.