ex minister senthil balaji blame tamilnadu government
தமிழ்நாட்டில் அரசியல் களமும் சூழலும் நாளுக்கு நாள் பரபரப்பாகிக் கொண்டே போகிறது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆட்சியாளர்கள் அடித்த அந்தர் பல்டிகள், அணி தாவல்கள், விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள், மக்கள் பிரச்னைகள் என தமிழகமே ரணகளமாகிக் கிடக்கிறது.
இதுபோதாதென்று, ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம். இப்படியாக தமிழக அரசியல் களமே பரபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், பேருந்து கட்டணத்தை தடாலடியாக உயர்த்தி மக்களின் தலையில் இடியைப் போட்டது தமிழக அரசு.
சுமார் 50 முதல் 100% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பேருந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் நடத்திய போராட்டங்கள், கொடுத்த அழுத்தங்களின் காரணமாக பேருந்து கட்டணத்தை சிறிய அளவில் அரசு குறைத்தது.
ஆனால், பெயரளவுக்கு கண் துடைப்பாகவே பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. போக்குவரத்து நிர்வாகத்தை சரியாக நடத்தாததுதான் நிதி நெருக்கடிக்கும் இழப்புக்கும் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். தனியார் பேருந்து உரிமையாளர்களின் லாபத்திற்காகத்தான் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், கோவையில் நடந்த தினகரன் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா அரசாக இருந்தால் பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெறப்பட்டிருக்கும். போக்குவரத்துத் துறை பொதுமக்களுக்கு சேவையாற்றக்கூடிய துறை. வருமானம் என்ற அடிப்படையில் இந்தத் துறையைப் பார்க்கக்கூடாது. ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை அரசுதான் வழங்க வேண்டும். சேலத்திலிருந்து கோவைக்கு சுமார் 1,000 பேருந்து வழித்தடங்களை முக்கிய அமைச்சர்கள் சிலர் வாங்கிய பிறகுதான் பேருந்துக் கட்டண உயர்வு நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர்களிடம் `பெட்டியும்' வாங்கியிருக்கிறார்கள் என்று பேசினார்.
முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு, பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோணத்தில் இதுவரை யோசிக்காதவர்களும், பேருந்து கட்டண உயர்வுக்கு இதுவும் காரணமாக இருக்குமோ என யோசிக்கத் தொடங்கிவிட்டனர். ஆக மொத்தத்தில் முன்னாள் அமைச்சரின் பேச்சு தமிழகத்தில் மற்றுமொரு பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது.
