கடந்த சில நாட்களாக உலாவிவந்த செய்தி கிட்டத்தட்ட கிளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆமாம், நாளை காலை, அதாவது 13ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திமுக தலைமைக்கு கழகம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார். 

அவர் இணையும்போது, செந்தில் பாலாஜி திமுகவிற்கு வருவதற்கு காரணமாக இருந்த திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவையும், கரூர் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனையும் உடன் இருக்கும்படி ஸ்டாலின் சொல்லியிருக்கிறாராம். இருவரும் நாளை அறிவாலயத்துக்கு வருகிறார்கள். செந்தில் பாலாஜியுடன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில MLA க்களும்  நாளையே திமுகவில் இணைகிறார்கள். 

சென்னைக்கு வந்துவிட்ட செந்தில் பாலாஜி, கரூரில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் சிலரையும் இன்று இரவுக்குள் சென்னை வந்துவிட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

இதனையடுத்து,  கரூரில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிட்டுள்ளாராம் செந்தில் பாலாஜி, அந்த பிரமாண்ட விழாவில் தனது ஆதரவாளர்களை கட்சியில் இணைக்கிறாராம்.  கரூரில் 2 லட்சம் பேரைக் கூட்டி, திமுக தலைவர் ஸ்டாலினை வரவழைத்து பிரமாண்டமாக நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகிறார்களாம்.

இதற்க்கு முன்னதாக, செந்தில் பாலாஜி தனது ஆஸ்தான ஜோதிடரிடம் இது சம்பந்தமாகப் பேச, அவரும், ‘நாளைக்கு சஷ்டிதான் நல்ல முகூர்த்த நாள். 10.45 மணிக்கு மேல இணைவது போலப் பார்த்துக்கோங்க...’ என நேரமும் குறித்துக் கொடுத்திருக்கிறார். கட்சியில் இணைந்ததுமே செந்தில் பாலாஜியை கரூர் மாவட்டச் செயலாளராக  அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.