முறையாக செயல்படுவார் என்றே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம் எனவும், முறையாக செயல்படவில்லை என்றால் முதலமைச்சரை மாற்றுவோம் எனவும் டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ பழனியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் முழக்கமிட்டு வருகிறார். 

அதனால் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

இதையடுத்து ஜெ சமாதியில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இணைப்பு நடைபெறவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த ஒபிஎஸ் இணைப்பு ஓரிரு நாளில் நடைபெறும் என தெரிவித்தார். 

இதைதொடர்ந்து டிடிவி தினகரனுடன் 10 எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.எல்.ஏ பழனியப்பன், முறையாக செயல்படுவார் என்றே முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம் எனவும், முறையாக செயல்படவில்லை என்றால் முதலமைச்சரை மாற்றுவோம் எனவும் தெரிவித்தார். 

மேலும், இணைகிறோம் என்ற பேச்சுவார்த்தை கேலிக்கையாக உள்ளது எனவும், பழனியப்பன் தெரிவித்தார்.