பிரிக்க முடியாதது திமுகவும் மின்வெட்டும்... மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மரண கலாய்..!
திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது திமுகவும் மின்வெட்டும்தான் என்று முன்னாள் அமைச்சரும் நத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
திண்டுக்கலில் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுக்கு காரணம் என்ன் என்பது மின்துறை அமைச்சருக்கு அத்துறையைப் பற்றி புரிதல் இல்லாததே காரணம். மின்வெட்டை தீர்க்க முழுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் மின்வெட்டும் வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நகைச்சுவை காட்சி ஒன்று வரும். அந்தப் படத்தில் நாகேஷ் கூறுவதுபோல் பிரிக்க முடியாதது திமுகவும் மின்வெட்டும்தான்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு வருவது அது அவர்களுடைய ராசி போல உள்ளது. தமிழகத்தில் உள்ள மின்வெட்டு பராமரிப்புகளை நான்கு நாட்களில் சரிசெய்துவிடலாம். ஆனால், இப்போது சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால், முன்பு திமுக ஆட்சியில் மின்வெட்டு இருந்தது போல அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. மின்வெட்டுக்கு அற்பமான காரணங்களை கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு கெடும். அதேபோல் திமுகவையும் அராஜகத்தையும் பிரிக்க முடியாது. இது திமுகவுக்கான கலாச்சாரம். அடாவடி, கட்டப்பஞ்சாயத்து, அராஜகம் என எல்லாமும் இருக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவ அதிமுக எடுத்த உத்திகளும் வியூகங்களுமே காரணம். அது திமுகவுக்கு சாதகமாக மாறிவிட்டது. அதிமுகவை மக்கள் வெறுத்து ஒதுக்கவில்லை. திமுகவை விரும்பி ஏற்கவும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தது ஒரு விபத்துதான். தவறு என்று வெளிப்படையாகத் தெரிந்தே தேர்தல் நேரத்தில் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால், தமிழகத்தில் சில கோரிக்கைகள் நிறைவேற்றி இருக்கிறார்கள். முக்கியமாக பெண்களுக்கு நிதி உதவி, பழைய பென்சன் திட்டம் ஆகியவை கவர்னர் உரையில் இல்லை.
5 பவுன் நகை தள்ளுபடி, நீட் தேர்வு ரத்து பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. நீட் தேர்வில் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். இந்த அரசு மாணவர்களின் வருங்கால வாழ்க்கையில் சூனியமான ஆபத்தான போக்கை கையாள்கிறது” என்று நத்தம் விஸ்வநாதன் குற்றம் சாட்டினார்.