EX CM panneerselvam confusion on political stand
சசிகலாவை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அதிமுக தொண்டர்களின் ஆதரவு பன்னீருக்கு அதிகரித்து வருகிறது. அதனால், மேடை தோறும் எடப்பாடி ஆட்சியை அவர் விமர்சித்து வருவதுடன், திமுகவையும் அவ்வப்போது சீண்டி வருகிறார். காஞ்சிபுரத்தில் தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் இதுவரை அவர் ஒன்பது பொது கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். அனைத்திலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில், கடந்த ஞாயிற்று கிழமை ராமநாதபுரத்தில் நடந்த பொது கூட்டத்திலும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால், தொண்டர்களை கவரும் விதத்தில் பேச, சரியான காரணங்களும், பேச்சாளர்களும் இல்லை என்ற விதத்திலேயே இந்த கூட்டமும் இருந்தது. தற்போது சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வரும் நிலையில், எடப்பாடி அரசுக்கு எதிராக, பன்னீரோ அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏ க்களோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த கேள்வியும் எழுப்பவில்லை. மாறாக எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ க்களுடன் இணக்கமாகவே செயல் பட்டு வருகின்றனர்.
ஆனால், பொதுக்கூட்ட மேடைகளில் மட்டும், எடப்பாடிக்கு எதிராக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள பன்னீர், ஸ்டாலினுடன் எடப்பாடி கூட்டணி வைத்துள்ளார் என்று ஒரு குற்றச்சாட்டை, ராமநாதபுரம் கூட்டத்தில் முன்வைத்தார். கூவத்தூரில், எம்.எல்.ஏ க்கள் தங்க வைக்கப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர் பன்னீர்தான். ஆனால், அது தொடர்பான வீடியோ வெளியானது குறித்த காரசார விவாதம் சட்டமன்றத்தில் நடந்தபோது, எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தார் பன்னீர்.
அதேபோல, நம்பிக்கை வாக்கெடுப்பு, குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பான பிரச்சினையின் போதும், அமைதியாகவே இருந்தார் பன்னீர். இவ்வாறு, குரல்கொடுக்க வேண்டிய இடமான சட்டமன்றத்தில் முழுமையான மவுன விரதம் கடைபிடிக்கும் பன்னீர், பொதுக்கூட்ட மேடையில் பொங்குவது அழகல்ல என்று ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், சேகர் ரெட்டி டைரி விவகாரத்தில், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, முதலமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யாதது குறித்து, சட்டமன்றத்தில், பன்னீர் குரல் கொடுக்காதது ஏன்? என்றும் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். அத்துடன், டெல்லியில் உள்ளவர்களுக்கு ‘ஆளவட்டம்’ போடும் முயற்சியை கைவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தை கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.
உண்மையில், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பன்னீருக்கு கிடைத்துள்ள ஆதரவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர் எடப்பாடிக்கு எதிராக சட்டமன்றத்தில் பேசாதது ஏன்? என்று யோசிக்க வேண்டியுள்ளது. அடுத்து, அணிகள் இணைப்பு இல்லை என்று உறுதியாக இருப்பது உண்மையானால், சட்டமன்றத்தின் பல்வேறு விவாதங்களில் அவர் மவுன விரதம் கடைபிடிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுவதை தவிர்ப்பதற்கில்லை.
இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு பன்னீரின் மேடை பேச்சை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டிய கட்டாயமும் அதிமுக தொண்டர்களுக்கு இல்லை. இந்த நிலையில், பன்னீர் சட்டமன்றத்தில் ஒரு நிலைப்பாடும், பொதுக்கூட்டத்தில் ஒரு நிலைப்பாடும் எடுக்கும் அளவுக்கு குழப்பத்தில் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு அவரால் மட்டுமே பதில் கூற முடியும்.
