ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதல்வரையே சாரும்.! நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் - ஈவிகேஎஸ்
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றியின் பெருமை முதலமைச்சரையே சாரும் என தெரிவித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏவாக பணியாற்றுவது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.
ஈவிகேஎஸ் முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றார். 398 தபால் வாக்குகளில் 250 வாக்குகளை ஈவிகேஎஸ் பெற்றார். தென்னரசு 104 வாக்குகள் மட்டும் பெற்றார். இதனையடுத்து மின்னனு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணப்பட்டது. அதில் ஒவ்வொரு சுற்றிலும் அதிமுக வேட்பாளரை விட 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வாக்குகள் வரை கூடுதலாக ஈவிகேஎஸ் பெற்றார். இதனையடுத்து வாக்கு வித்தியாசம் அதிகமாக இருந்ததையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார். அப்போது அவர் பணநாயகம் வென்றதாகவும், ஜனநாயகம் தோற்றதாக கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்
அதே நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு தொகுதி மக்களின் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் நானும் பங்கு பெறுவது பெருமை அளிக்கிறது. ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி ராகுல் காந்தி மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தவர், மதச்சார்பற்ற கூட்டணி மீது மக்கள் வைத்த நம்பிக்கை கிடைத்த வெற்றி எனவும் கூறினார். ஈரோடு தேர்தலில் தனக்காக பிரச்சாரம் செய்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு எடுத்தக்காட்டாக இருக்கும் என கூறினார்.
இதையும் படியுங்கள்