தமிழக காங்கிரசில் தை பிறந்தவுடன் மாற்றம் இருக்கும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் துவக்க தினத்தை முன்னிட்டு சென்னை பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு மையத்தில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.மனோகர் செய்தார்.

இதில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது, முத்தலாக் சட்டம் ஏற்கத்தக்கதல்ல. நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கு பிறகு இச்சட்டத்தை இயற்றியிருக்க வேண்டும். ஆனால், பாஜ அரசு பெரும்பான்மை உள்ள ஆணவத்தால், சர்வாதிகார ஆட்சிபோல் இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்தை கண்டித்து காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.

தமிழக காங்கிரசில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மாற்றம் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், தமிழக காங்கிரசில் தை பிறந்தவுடன் மாற்றம் இருக்கும். தமிழக காங்கிரஸ் தலைவரை மாற்றுவது குறித்து ராகுல்காந்திதான் முடிவு செய்வார்.

தியாகத்துக்கு பெயர் பெற்ற கட்சி என்றால் ராஜீவ் காந்தி குடும்பத்தை எடுத்து கூறலாம். இன்று அனைவர் கையிலும் செல்போன் இருப்பதற்கு அந்த குடும்பம்தான் காரணம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கி செல்வதற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம்.

கடந்த நாலரை ஆண்டுகளில் மோடி வெளிநாட்டு சுற்றுப் பயணத்துக்கு பலகோடி செலவிட்டுள்ளார். அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதில் இதுவரை எவ்வித பயனும் ஏற்படவில்லை.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.