தமிழக காங்கிரஸின் மாஜி தலைவரான இளங்கோவன், சிட்டிங் தலைவரான திருநாவுக்கரசரை அந்தப் பதவியில் இருந்து இறக்குவதே தன் ஒரே இலக்கு என்று வெறித்தனமாய் ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால் ‘நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் நான் தான் மாநில காங்கிரஸின் தலைவர். எந்த மாற்றமும் இல்லை!’ என்று கெத்தாக அறிவித்துவிட்டார் அரசர். ஆனாலும் கூட விட்டேனா பார்...என்று ’டெல்லி சென்று தலைமை முக்கியஸ்தர்களை சந்தித்துவிட்டு நல்ல முடிவுக்கு வழி செய்கிறேன்!’ என்று தன் ஆதரவாளர்களை தேற்றியிருக்கிறார் இளங்கோவன். 

இப்படி உட்கட்சிக்குள்ளேயே பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர், வெளி எதிரிகளை விட்டா வைப்பார்?...தமிழகத்தில் காலூன்ற முயலும் பி.ஜே.பி.யை பற்றி அதிரடியாய் ஒரு விமர்சனத்தைக் கொளுத்திப் போட்டிருக்கும் இளங்கோவன்...

”தமிழகத்தில்  தாமரை மலரும்! பி.ஜே.பி. வளரும்! என்று சிலர் ஓவராய் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஒன்றை உறுதியாய்ச் சொல்கிறேன்...

எடப்பாடி, பன்னீர் செல்வம் ஆகியோர் தலைவர்களாக இருக்கும்  அ.தி.மு.க. மட்டுமல்ல, ஆனானப்பட்ட  ஜெயலலிதாவே மீண்டும் பிறந்து வந்து அ.தி.மு.க.வை வழிநடத்திட துவங்கி, தேர்தலில் பி.ஜே.பி.யை ஆதரித்தாலும் கூட தமிழகத்தில் பி.ஜே.பி. கரை சேராது. தாங்கள் வளர்ந்துவிடுவோம் என்று கனவு கண்டு கொண்டு பேசும் பி.ஜே.பி.யினரின் பேச்சு செல்லுபடியே ஆகாது. தமிழகத்தில் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் சரி, பி.ஜே.பி. வலிமையான இடத்தைப் பிடிக்கவே முடியாது.”  என்று வழக்கம்போல் வேடிக்கையாக வெளுத்துவிட்டார் மனிதர். 

இதற்கு தமிழிசையின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்றும், ‘அம்மாவை ஏன் இதில் இழுத்தீர்?’ என்று தம்பிதுரையும் எப்படியெல்லாம் இளங்கோவனை சாத்தி எடுக்கப்போகிறார்கள் என்று கவனிப்போம்.