ரஜினி மற்றும் கமல் ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைமுகமாக கிண்டலடித்துள்ளார். 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக மாணவர் காங்கிரஸின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ரஜினி மற்றும் கமல் ஆகியோரை கிண்டலடித்து பேசினார். அதற்கு முன்னதாக சென்னை-சேலம் 8 வழி சாலை தொடர்பாகவும் தமிழகத்தில் தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்கள் தொடர்பாகவும் இளங்கோவன் பேசினார். 

அப்போது, வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் தான். அதற்காக சாலை போடுவதை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை எதிர்த்துத்தான் ஆக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை போன்ற திட்டங்களை எதிர்ப்பதில் நியாயம் உண்டு. ஆனால் எல்லா திட்டத்தையும் எதிர்ப்பது என்பதை நான் ஏற்க மாட்டேன் என்றார். 

சிலர் பட ரிலீசுக்கு முன்பு மட்டும் பேசுகிறார்கள். இன்னும் சிலர் பேசுவதே புரிவதில்லை என ரஜினி மற்றும் கமலை மறைமுகமாக விமர்சித்து பேசினார்.