தமிழ்நாட்டில் அமைச்சர்களுக்கு ஒருநாளைக்கு ரூ.100 கோடிக்கு மேல் லஞ்ச பணம் கிடைப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை புழல் அருகே காவாங்கரையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் இல்லை; அழிந்துவிட்டது என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இளங்கோவன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை வாய் திறக்காத அமைச்சர் ஜெயக்குமார், அண்மைக்காலமாக அடாவடித்தனமாக பேசிவருகிறார். காங்கிரஸை ஒழித்துவிட்டதாக கூறும் ஜெயக்குமார் விரைவில் புழல் சிறைக்கு சென்று கம்பி எண்ணப்போகிறார் என்று எச்சரித்தார். 

மேலும், தமிழகத்தில் அமைச்சர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.100 கோடி லஞ்ச பணம் கிடைப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். பிரதமர் மோடியின் ஆட்சி குறித்த கேள்விக்கு, நாடோடி மன்னனாக வெளிநாடுகளிலேயே சுற்றிவரும் பிரதமருக்கு இந்திய ஏழைகளை பற்றிய கவலையில்லை என விமர்சித்தார்.