உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட்  சிகரத்தின் உயரம் மேலும் ஒரு மீட்டர் உயரத்திற்கு அதிகரித்திருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவும் நேபாளம் செவ்வாய்க்கிழமை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் உயரம் முன்பு 8848 மீட்டராக இருந்த நிலையில் தற்போது அதன் உயரம் 8848.86 மீட்டராக பதிவாகியுள்ளது. இது சீனா வெளியிட்ட முந்தைய அளவைவிட 4 மீட்டர் உயரம் அதிகம் ஆகும். 

உலகின் உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அதைச் சுற்றியுள்ள நாடுகளால் அடிக்கடி அளவிடப்பட்டு வருகிறது. மலையின் உயரத்தை மீண்டும் அளவிட நேபாள அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமித்த அதேவேளையில், சீனாவும் திபேத்திய பக்கத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிடும் பணியை தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டபோது இரு நாடுகளும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கூட்டாக அளவிட்டு அறிவிக்க ஒப்பந்தம் கையெழுத்தானதின் அடிப்படையில் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்  கடந்த ஒரு வருட காலமாக  அளவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நேபாள அமைச்சரால் அதிகாரப்பூர்வமாக அதன் உயரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப்குமார் கியாவாலி எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848. 86 மீட்டர் என பதிவாகி இருப்பதாக அறிவித்துள்ளார். முன்னதாக சர்வே ஆஃப் இந்தியா 1954 ல் அளவிடப்பட்டது அப்போது அதன் உயரம் 8848 மீட்டர் என பதிவாகி இருந்தது, இந்நிலையில் சிகரத்தின் உயரம் அதிகரித்திருப்பது அனைவர் மத்தியிலும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலை குறித்து ஆராய்ச்சி செய்யும் பல நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் எவரெஸ்ட் உயரம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலமுறை கூறியிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 2015ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் வேறு சில புவியியல் நிகழ்வுகள் சிகரத்தின் உயரத்தில் மாற்றத்தை ஏற்படு த்தி இருக்கக் கூடும் என நேபாள அரசு கணித்து இருந்தது. இந்நிலையில் அதன் உயரத்தை மீண்டும் அளவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.