கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல் செய்யப்பட்டிருந்த நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியோடு, முடிவுக்கு வருகிறது. பல மாநிலங்கள், கொரோனாவைத் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், இந்தியப் பொருளாதாரத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தாக்கம் மற்றும் சாகுபடி காலம் நெருங்கி வருவதால், கொரோனா அதிகமாக பரவும் ‘ஹாட்ஸ்பாட்' இடங்களை மட்டும் சீல் செய்துவிட்டு, மற்ற இடங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

 

இந்நிலையில் இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் காணொளி மூலம் தெரிவிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி. 

ஆனால்,  ஊரடங்கு நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன. ஆனால், இந்த முறை கட்டுப்பாடுகளில் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என்று தெரிகிறது. குறிப்பாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை, பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடல், மத சம்பந்தமான கூட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்று கூறப்படுகிறது. 

ஊரடங்கினால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளதால், சில துறைகளுக்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு கொடுக்கப்படலாம். நாட்டில் மொத்தமுள்ள 600 மாவட்டங்களில் 75-ல்தான் கொரோனா பரவல் என்பது மிக அதிகமாக இருப்பதாகவும், இதனால் அரசு இந்த முறை அதற்கு ஏற்றாற்போல் திட்டமிடும் எனவும் தெரிகிறது. கடந்த வியாழக் கிழமை நாட்டில் உள்ள அனைத்துப் பிரதான கட்சித் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ஊரடங்கை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 

“அரசின் நோக்கம் என்பது ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதுதான். தற்போது நாட்டில் நிலவும் பிரச்னை என்பது சமூக அவசரநிலைக்குச் சமமானது. இதனால் சில கறார் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அது தொடர வேண்டும்,” என்று பிரதமர் கூறியதாக, அவருடன் ஆலோசனையில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பல மாநிலங்களும், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா மாநில அரசு, மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று அறிவித்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பரிந்து செய்துள்ளது. அதே நேரத்தில் முதல்வர் பழனிசாமி, ‘தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் 2-ம் கட்ட நிலையில்தான் உள்ளது. இது 3-ம் நிலைக்கு செல்ல வாய்ப்புகள் உள்ளன. நோயின் நிலைமையை அனுசரித்துத்தான் ஊரடங்கை நீடிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்று தெளிவு படுத்தியுள்ளார். ஆனாலும், அடுத்த ஊரடங்கு உத்தரவில் பல கெடுபிடிகள் தளர்த்தப்படலாம் எனக்கூறப்படுகிறது. சமூக இடைவெளியை கடைபிடித்து சில விதிமுறைகளில் தளர் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.