அனைத்து எதிர்கட்சிகளையும் பாஜக முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அவர்களால் என்னைத் தவிர தைரியமாக பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது’’ என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சென்னை, சோழிங்கநல்லூரில் ஓஎம்ஆர்- ஈசிஆர் ஜமாத் ஒருங்கிணைப்பின் தலைவர்கள் சார்பில் மாபெரும் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ’’மதரீதியாக நாட்டிலிருந்து தொடர்ந்து பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதாக முயற்சிக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்தானது. இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் இந்து சமூகத்துக்கு எதிரானது அல்ல. சங்பரிவார் அமைப்புகளுக்கு எதிரானது. பாபர் மசூதி இடிப்பின் மூலம் ஒருபார்வையை தங்கள் பக்கம் திருப்பி 1998-ல் ஆட்சிக்கு வந்தார்கள்.

அதே உத்தியை மறுபடியும் மறுபடியும் நிலைநாட்ட வேண்டும் என்கிற அடிப்படையில் தான் முஸ்லிம்களை குறிவைத்து இந்த நாட்டை மதத்தின் பெயரால் இரண்டாகப் பிளந்து தொடர்ந்து தங்களது ஆட்சியை  தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் முட்டுச்சந்து கொண்டுபோய் எதிர்க்கட்சியில் நிறுத்திவிட்டால் இப்போ திருமாவளவன் பேசுவதைப் போல எல்லா எதிர்கட்சிகள் பேச முடியாது. இந்த நாட்டுக்கு இந்துராஷ்டிரம் என்று பெயர் வைக்கப் போகிறான். அவன் இந்நாட்டுக்கு இந்து மதத்தை அரச மதமாக்கப்பார்க்கிறான்.  முஸ்லிம் அல்லாத அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் என்று பேசுவதில் அவர்களுக்கு ஓட்டு சிக்கல் வருகிறது.

வாக்கு வங்கியில் சிக்கலிலிருந்து அவ்வளவு வேகமாக பேச முடியாது. இப்போது காங்கிரஸ் பாஜக ஆட்சியை எதிர்த்து பேசமுடியாது. இடதுசாரிகள் வேகமாக பேச முடியாது. எதிர்க்கட்சிகள் பேச முடியாது. முட்டுச்சந்தில் போய் நிறுத்தி வைத்துவிட்டு எல்லாருக்கும் ஒரு செக்மேட் வைத்துள்ளது பிஜேபி.  முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது, எதிர்க்கட்சிகளை முடக்குவது, இந்திய சமூகத்தை மதத்தின் பேரால் இரண்டாகப் பிழப்பது.  இந்துராஷ்டிரம் என்ற பெயரை இந்தியாவுக்கு சூட்டுவது இந்து மதத்தை அரச மதமாக அறிவிப்பது இவற்றுக்கெல்லாம் தடையாய் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எரிவது. ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்வது.

 இந்த காரணங்களால் செயல்பட்டுக் கொண்டிருக்கிறனர். பாஜகவின் செயல்திட்டத்தை புரிந்துகொண்டு நம்முடைய நோக்கம் நாம் பொதுவான, ஏதுவான இந்துக்களுக்கு எதிராக பேசவில்லை. அப்பாவி உழைக்கும் இந்து சமூகத்திற்கு எதிராக பேசவில்லை. முஸ்லிம்களின் போராட்டம் இந்துக்களுக்கு எதிரானது அல்ல. இந்தியா எங்கள் தாய்நாடு. இஸ்லாம் எங்கள் மதம். ஒரு கையில் இந்திய கொடியை ஏந்தியபடி, இன்னொரு கையிலே காந்தியின் படம் வைத்துக் கொண்டு தான் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையர்களை எதிர்த்து எப்படி என்று இஸ்லாமிய சமூகம் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோ? அப்படி இன்று மதவெறியர்களை எதிர்த்து இந்த பாரத தேசத்தை மீட்பதற்காக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இஸ்லாமியர்களின் போராட்டமாக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகளின் போராட்டமாக இருந்தாலும் இடதுசாரிகளின் போராட்டமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டமாக இருந்தாலும், இது ஒட்டுமொத்த உழைக்கும் இந்து சமூகத்திற்கு எதிரான, மதவெறி பிடித்த பிஜேபி உள்ளிட்ட சங்பரிவார் களுக்கு எதிரான போராட்டம். பிஜேபியை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறார்கள். இந்த நிலையில் நான் பிஜேபியை எதிர்த்து இறங்க வேண்டும். எனவேதான் இஸ்லாமியர் அல்லாத இதர ஜனநாயக சக்திகள் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்கிற ஒரு அறைகூவல் விடுக்கும் வகையில் 22ஆம் தேதி விடுதலைச்சிறுத்தைகளின் பேரணி திருச்சியில் நடைபெறுகிறது.

இது ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கு ஆபத்து இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து எனவே நாட்டைக் காக்கும் திட்டத்தில் நாம் போராடுவோம் போராடுவோம் என்று கூறிக்கொள்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.