கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவை நகரில் பல இடங்களில் மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுகின்றன. கோவையில் மழை நீர் வடிகால் வசதிகளும் சரியில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் 200 நாட்கள் தங்கி பிரசாரம் செய்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. ஏனென்றால் திமுக கூட்டணி மிக வலுவாக உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது திமுகவுக்கும் உள்ளது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினே கூறியுள்ளார். இதுதொடர்பான பொய் பிரசாரங்கள் பொது மக்களிடம் எடுபடாது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக கொமதேக ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளன. அவர்களுக்கு இனியும் ஆதரவு தொடரும்.


கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் முழுமையாக முடிந்த பிறகே அதைப் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவுசெய்த நிலையில் அதற்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முதலில் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளிப்பது அரசின் கடமையாகும்.” என்று ஈஸ்வரன்  தெரிவித்தார்.