9-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  தேர்வு நடத்துவதை தனியார் பள்ளிகள் கைவிட வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர், ’’கொரோனா அச்சம் காரணமாக 9ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க அரசு ஆணையிட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறந்தபிறகு தேர்வு நடத்தி தான் தேர்ச்சி அளிக்கப்படும் என சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது!

அனைவருக்கும் தேர்ச்சி வழங்க அரசே ஆணையிட்ட பிறகும் தனியார் பள்ளிகள் தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருப்பது மாணவர்களிடையே தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தி விடும். இது தேவையற்றது. எனவே, 9-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு  தேர்வு நடத்துவதை தனியார் பள்ளிகள் கைவிட வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார். 

அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து, ‘’லட்சக்கணக்கான மாணவச்செல்வங்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள், பெற்றோர்கள்  உள்ளிட்டோரின் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும். 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஆபத்து இன்னும் குறையாததால்,  12 மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இச்சூழலில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை நடத்துவது தேவையற்ற விபரீதத்தில் முடிந்துவிடும் என்பதை  உணர்ந்து அரசு செயல்பட வேண்டும்’’என எச்சரித்துள்ளார்.