முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக டிடிவி தினகரன் அணிக்கு தாவி, அமமுகவில் இணைந்தார். அமமுக மாநில அமைப்புச் செயலாளர், மாவட்டச் செயலாளர், கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளராக பதவி வகித்து வந்த  செந்தில் பாலாஜி, தினகரன் இடையே விரிசல் ஏற்பட்டதால் திமுகவில் இணைந்தார்.

திமுகவில் பொறுப்பு வாங்கிய கையேடு தினகரனின் கூடாரத்தில் இருக்கும் சில முக்கிய புள்ளிகளை திமுகவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ள செந்தில் பாலாஜி திமுகவிற்கு வந்ததிலிருந்து, மாவட்டம் தோறும் உள்ள அமமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளை திமுகவிற்கு தூக்கி வருகிறார்.

அதன் முதல் முயற்சியாக டிடிவி தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த கோவை பொன்மலை குமாரசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
 
இதனைத் தொடர்ந்து, இன்று காலை, அமமுக-வின் ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி பரணீதரன், மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.பிரபு உள்ளிட்ட நகர மாவட்ட அணி நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அப்போது கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார். 

தினகரன் கட்சியிலிருக்கும் முக்கிய புள்ளிகளை தூக்கி வரும் திமுக, கடைசிக்கட்டமாக ஆண்டிப்பட்டி தங்கத் தமிழ்செல்வனை திமுகவிற்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.