தமிழகத்தின் தொன்மையான நாகரிகத்தை  வெளிக்காட்டிய கீழடிக்கு நிகரான 2300 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகத்தைக் கொண்ட கொடுமணல் அகழாய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் வடகரையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்தில் கொடுமணல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1961ம் ஆண்டு முதன் முதலில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து 1980 களில் தொடங்கி 2018 ஆம் ஆண்டு வரை பல முறை அகழ்வாய்வு செய்யப்பட்டுள்ளது.  மத்திய மாநில அரசுகளின் தொல்லியல்துறை மற்றும் புதுச்சேரி  பல்கலைக் கழகத்தினர் இங்கு தொடர்ந்து அகழாய்வுகள் செய்து வந்துள்ளனர்.

2300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மனித நாகரிகம் இருந்ததற்கான ஏராளமான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. இந்நிலையில் மேலும் விரிவான ஆய்வுகள் செய்வதற்காக தமிழக அரசின் தொல்லியல் துறை ரூபாய் 31 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன்பே, இப்பணி தொடங்குவதாக இருந்தது. எனினும் ஊரடங்கு காரணமாக இப்பணி தொடங்குவது தாமதமாகி மே-27 ஆம் தேதி அகழாய்வு குழுவினர் பணியை தொடங்கியுள்ளனர். அகழாய்வு பணி இயக்குனர் ஜே.ரஞ்சித் தலைமையிலான குழுவினர் பணியை மேற்கொண்டுள்ளனர். நான்கு மேற்பார்வையாளர்கள் 15 பணியாளர்கள் தற்போது மேற்பரப்பை சுத்தம் செய்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். 

இம்முறை கொடுமணலில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்யப்படும்,  ஏற்கனவே இங்கு கி.மு மூன்றாம் நூற்றாண்டு காலத்தை குறிக்கும் வளமான பல சான்றுகள் கிடைத்துள்ளன. இம்முறை அகழ்வாய்வில் மனிதர்கள் வாழ்ந்த குடியிருப்புகள், புதைக்கப்பட்ட மைதானங்கள், உள்ளிட்டவை விரிவாக ஆய்வு செய்யப்படும். இதில் கிடைத்திருக்கும் விபரங்கள், சேகரிக்கப்படும் பொருட்கள் கார்பன் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதன் காலம் நிர்ணயிக்கப்படும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொடுமணலைச் சேர்ந்த முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜி.ராமச்சந்திரன் அகழாய்வு  குழுவினருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.