நாங்குநேரி தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் திமுக – காங்கிரஸ் இடையே மோதல் இருந்து வரும் நிலையில் அங்கு தான் தான் திமுக சார்பில் போட்டியிட உள்ளதாக எர்ணாவூர் நாராயணன் கூறி வருகிறார்.

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் உயர் பொறுப்பில் இருந்தவர் எர்ணாவூர் நாராயணன். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சரத்குமாரிடம் இருந்து விலகி சமத்துவ மக்கள் கழகம் என்கிற கட்சியை துவக்கினார்.

இந்த கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே நாங்குநேரி தொகுதியை பெற்றுவிட எர்ணாவூர் நாராயணன் ஆர்வம் காட்டினார். ஏனென்றால் கடந்த 2011 முதல் 2016 வரை நாங்குநேரி எம்எல்ஏவாக அவர் இருந்துள்ளார்.

ஆனால் திமுக கூட்டணியில் நாங்குநேரி காங்கிரசுக்கு சென்றுவிட்டதாலும் திமுக சார்பில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும், தமிழ்நாடு நாடார் பேரவையின் தலைவருமான என்.ஆர்.தனபாலனுக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டதாலும் எர்ணாவூர் நாராயணனை ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் கூட தேர்தலுக்கு பிறகு திமுக தலைமையுடன் அவர் மிகவும் நெருங்கினார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து எர்ணாவூர் நாராயணன் வேலை பார்த்தார். இதன் மூலம் ஸ்டாலினின் கவனத்தை ஈர்த்த எர்ணாவூர் நாராயணன் அண்மையில் காமராஜர் பிறந்த நாள் விழாவை ஸ்டாலினை அழைத்து வந்து மிகவும் பிரமாண்டமாக கொண்டாடி காட்டினார்.

இதற்கெல்லாம் காரணம் நாங்குநேரி தொகுதியில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் களம் இறங்கும் முயற்சி தான் என்றார்கள். இதனிடையே எர்ணாவூர் நாராயணன் நெல்லை மாவட்ட திமுக நிர்வாகிகள் அனைவரையும் தாஜா செய்துவிட்டதாகவும் எனவே அங்கு திமுக போட்டியிட முடிவு செய்தால் இவரையே மாவட்டச் செயலாளர்கள் வேட்பாளராக பரிந்துரைக்கலாம் என்று சொல்கிறார்கள்.

இந்த தைரியத்தில் நாங்குநேரி திமுக வேட்பாளர் நான் தான் என்று எர்ணாவூர் நாராயணன் கூறிக் கொண்டிருக்கிறாராம். ஆனால் இதனை கேட்ட சில திமுக நிர்வாகிகள் இவர் யாருயா குறுக்கு சால் ஓட்றது, முதல்ல அங்க திமுக போட்டியிடுமாங்றதே சந்தேகம் தான் என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.