’தே.மு.தி.க.வை கூட்டணியில வெச்சிருக்கிறது, தேளை பாக்கெட்ல வெச்சுட்டு சுத்துறா மாதிரி. அடிக்கடி கொட்டி கொட்டி ரணமாக்கிட்டே இருக்கும்.’ என்று புலம்பித் தவிக்கிறது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 

காரணம்?....

சமீபத்தில் தங்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் ஒன்றில் பிரேமலதா ஆத்து ஆத்துன்னு ஆத்திய உரைதான். பிரேமலதா பேசிய விஷயங்கள் அ.தி.மு.க.வின் தலைமை பீட நபர்களை பெரியளவில் கடுப்பாக்கி இருக்கின்றன. இப்படியே  கண்டும் காணாமலும் விட்டுக் கொண்டிருந்தல் தே.மு.தி.க.வின் மிதப்பு அதிகமாகி, நமக்கே ஆப்பாக முடிந்துவிடும்! என்று சில அமைச்சர்களே டென்ஷனாகுமளவுக்கு சூழல் போய்விட்டது. 
அப்படி என்னதான் பேசிவிட்டார் பிரேமலதா? என்று அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் கேட்டபோது.....


”2011 சட்டசபை தேர்தல் மூலம் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உருவானது. அமோக வெற்றி பெற்று, ஜெ., முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்கள். ஆனால் ’யாரால் கூட்டணி வென்றது?’ எனும் ஈகோ சிக்கலால் இருகட்சிகளும் கடுமையாக மோதி பிரிந்தன. 

அதன் பின் தே.மு.தி.க.வை மிக கடுமையாக வெறுத்தார் ஜெயலலிதா. சொல்லப்போனால் அக்கட்சியின் பெயரை கேட்டாலே அவருக்கு கூசியதாம், ‘இனி தே.மு.தி.க.வுக்கு சரிவுதான்’ என்று சாபமே விட்டார். அப்பேர்ப்பட்ட தே.மு.தி.க.வுடன் தான் இந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி வைத்தது அ.தி.மு.க. உட்கட்சிக்குள் விமர்சனம் எழுந்தபோது ‘என்ன பண்ண பா.ஜ.க. விரும்புகிறதே!’ என்றார்கள். அந்த கூட்டணி உறுதியாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஜெயலலிதாவை விமர்சித்துதான் பேசினார் பிரேமலதா. ஆனாலும் இணைந்தது இரு கட்சிகளும். ஆனால் அந்த தேர்தலில் படு தோல்வி. அடுத்து வந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி. 

இந்த நிலையில்தான், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியை ‘எங்கள் மீது மக்கள் பூரண நம்பிக்கை வைத்துள்ளதை காட்டும் வெற்றி! வரும் பொது தேர்தலிலும் அம்மாவின் ஆட்சி தொடர மக்கள் வேண்டுவதை சொல்லும் வெற்றி! முதல்வர் எடப்பாடி  பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளதற்கு மக்கள் நன்றி சொல்லும் வெற்றி!’ என்று கொண்டாடுகிறது அ.தி.மு.க. 

ஆனால் அதே வேளையில் இந்த வெற்றிக்கு தாங்களே காரணம், என்று பா.ஜ.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. என அக்கூட்டணியிலுள்ள அத்தனை கட்சிகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. அதிலும் உச்சமாக பிரேமலதா  பேசிய பேச்சு, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரையும் கடுமையாக எரிச்சலூட்டியுள்ளது. தங்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரேமலதா ‘விக்கிரவாண்டியில் ஒரே நாள் மட்டுமே பிரசாரம் செய்த கேப்டன், கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை தேடித் தந்துள்ளார். இதேபோல் உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து மாநகராட்சியிலும் விஜயகாந்த் பிரசாரம் செய்வார். இரண்டு சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி தேடித்தந்தது போல், அவரால் உள்ளாட்சி மற்றும் பொது தேர்தல்களில் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும்.’ என்று பேசினார். 

இதுதான் அ.தி.மு.க.வை கோபப்படுத்தியுள்ளது. ‘என்னமோ விஜயகாந்த் பேசலேன்னா நாம ஜெயிச்சே இருக்கமாட்டோம் அப்படிங்கிற மாதிரி இந்தம்மா பேசிட்டு இருக்குது. அந்த கட்சி இல்லேன்னா எடப்பாடியாரின் ஆட்சியே பொழைச்சிருக்காதுங்கிற அளவுக்கு ஸீன் போட்டு பேசுறாங்க! 
உண்மையை சொல்றதுன்னா, விஜயகாந்த் அன்னைக்கு வேன்ல ஒரு ரவுண்டு வந்தார். என்னத்த பேசினார்? இவங்களை கூட்டணியில வெச்சிருக்கிறது பெரிய குடைச்சல்தான்.’ என்று பொசுங்கியுள்ளனர் அ.தி.மு.க.வினர். அநேகமாக தே.மு.தி.க.வுக்கு இது பெரிய சிக்கலை கொண்டு வந்து சேர்க்கலாம்.” என்று நிறுத்தினார்கள். 


-    விஷ்ணுப்ரியா