EPS vs OPS : நான் சிறைக்கு செல்வேனா.? ஓபிஎஸ் தான் விரைவில் சிறைக்கு செல்வார்- இறங்கி அடிக்கும் எடப்பாடி
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, எமர்ஜென்சி காலத்தில் கைது செய்த காங்கிரஸ் உடன் தான் தற்போது திமுக கூட்டணியில் வைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.
வெள்ள பாதிப்பு- முன்னெச்சரிக்கை நடவடிக்கை
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே.பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை உட்பட வட மாவட்டங்களிலும் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்த போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறியதாக குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சியின் போது பருவமழை பெய்வதற்கு முன்பே அரசு அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, குறிப்பாக சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அடைப்புகளை சீர் செய்வதும், நீர் நிலைகளை தூர்வாரும் பணிகளையும் மேற்கொண்டும், தாழ்வான பகுதிகளுக்கு மோட்டார்கள் முன்னெச்சரிக்கையாக கொண்டுவரப்பட்டு சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வெள்ள பாதிப்பு- உடமைகள் பாதிப்பு
தென் மாவட்டங்களிலும் அதிகன மழை பெய்யும் என முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்த போதும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவில்லை. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என முன்கூட்டியே தகவல் அளிக்காததால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஏராளமான மக்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏரல், காயப்பட்டணம் ஆகிய பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் அங்குள்ள உப்பளங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் மழையால் பாதிக்கப்படாமல் இருந்திருக்கும்.
நிவாரண நிதி- மத்திய அரசு
புயல் நிவாரண நிதிக்காக மத்திய அரசை அரசிடம் கேட்பது மட்டுமல்லாமல் மாநில அரசின் நிதியை பயன்படுத்தி உடனடியாக மக்களை மீட்டெடுக்க திமுக அரசு தவறியது. திமுக மத்திய அரசை குறை கூறுவதும், மத்திய அரசு மாநில அரசை குறை கூறுவதையும் தாண்டி மக்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் பாதிக்கப்படும்போது உரிய நிவாரண நிதியை மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்க வேண்டும். எண்ணூர் முகதுவாரத்தில் கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்த சேதம் ஏற்பட்டிருக்காது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை
அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்து திமுகவின் ஆர் எஸ் பாரதி சொல்லும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. மக்களுக்கு தேவையான விஷயங்கள் குறித்து உரிய வகையில் நாங்கள் சுட்டிக்காட்டி வருகிறோம். அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டோம். எமர்ஜென்சி காலத்தில் கைது செய்த காங்கிரஸ் உடன் தான் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. முன்பு பாஜகவோடும் திமுக கூட்டணியில் இருந்துள்ளது.
ஓபிஎஸ் சிறைக்கு செல்வார்
எங்கள் மீது ஓபிஎஸ் வைக்கும் அனைத்து புகார்களும் ஆதாரமற்றதாக உள்ளது. ஓபிஎஸ் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி. அவர் மீது பல வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வந்து அந்த வழக்கில் தண்டனை கிடைக்கும். அவர் குடும்பத்தில் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்.என் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு வழக்கினை வாபஸ் பெறாமல் உச்ச நீதிமன்றம் வரை எடுத்துச் சென்று நிரபராதி என நான் நிரூபித்துள்ளேன்.ஜெயலலிதாவிற்கு ஓபிஎஸ் 2 கோடி கடன் கொடுத்ததாக கூறுவது மிக மோசமான வார்த்தை. அதிமுகவில் இடையில் வந்து சேர்ந்தவர் அவர் நாங்கள் 1985 ஆம் ஆண்டு முதல் கட்சியில் விசுவாசமாக பயணித்து வருகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்