Asianet News TamilAsianet News Tamil

வேலைக்கும் போகலை.. உடமையையும் இழந்துட்டாங்க.. வெள்ள பாதிப்பு நிவாரணத் தொகையை ரூ. 12,000 ஆக உயர்த்திடுக- இபிஎஸ்

 மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் ஆயில் கழிவுகள் கலந்துள்ளதால், சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கூடுதலாக 25,000/- ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
 

EPS request to increase Chennai flood relief amount to 12 thousand KAK
Author
First Published Dec 10, 2023, 1:14 PM IST

சென்னை வெள்ள பாதிப்பு

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பையடுத்து தமிழக அரசு சார்பாக நிவாரண நிதியை உயர்ந்தி வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  திமுக அரசு முன்திட்டமிடாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஆட்சிப் பொறுப்பேற்ற 31 மாதங்களில், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, கடந்த வாரம் பெய்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் கடந்த ஒருவார காலமாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, உடைமைகளை இழந்து, வாகனங்களை இழந்து, தொழிலை இழந்து, இந்த அவல ஆட்சியாளர்கள் மீது தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையில், நிவாரணத் தொகை என்று ஒரு சொற்ப தொகையை அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

EPS request to increase Chennai flood relief amount to 12 thousand KAK

இழப்பீடு 6,000 போதாது 12,000 வழங்கிடுக

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6,000/- ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்த விடியா திமுக அரசு அறிவித்துள்ளது. மழை வெள்ளம் சாக்கடையுடன் கலந்து, பொதுமக்கள் அவர்களுடைய வீடுகளை விட்டும், குடியிருப்பு பகுதிகளை விட்டும் வெளியேற முடியாத நிலையில், கடந்த ஒருவார காலமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இன்னும் சகஜ நிலைக்கு திரும்ப ஒருவார காலம் ஆகும். ஏழை, எளிய, தினசரி வேலைக்குச் செல்லக்கூடியவர்கள், நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், வேலை செய்ய முடியாமல் தங்களது 15 நாள் வருமானத்தை இழந்துள்ளதுடன், தங்களது உடைமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

EPS request to increase Chennai flood relief amount to 12 thousand KAK

வாகனங்களுக்கு பழுது பார்க்கும் முகாம்

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான 6,000/- ரூபாயை உயர்த்தி 12,000/- ரூபாயாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். ஏழை, எளிய, சாமானிய மக்களின் அன்றாட போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த மழை வெள்ளத்தால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ளது.

இதை உடனடியாக அரசு, அந்தந்த வாகனங்களுக்குண்டான நிறுவனங்கள் மூலமாக, பகுதி வாரியாக சிறப்பு வாகன பழுது நீக்கும் முகாம்களை ஏற்பாடு செய்து அந்த வாகனங்களை அரசு செலவில் பழுது நீக்கி, பாதிக்கப்பட்டவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்ப ஏற்பாடு செய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். 

EPS request to increase Chennai flood relief amount to 12 thousand KAK

மழைநீரோடு கலந்த ஆயில்

சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கிவரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப கூடுதலாக 25,000/- ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில்நுட்ப உதவியுடன் தூய்மைப் படுத்தும் பணியினையும் செய்துதர வலியுறுத்துகிறேன்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அதிகாரிகளை அனுப்பி பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 25,000/- ரூபாய் இழப்பீடாக வழங்க வலியுறுத்துகிறேன்,

EPS request to increase Chennai flood relief amount to 12 thousand KAK

நெற்பயிர் சேதம்

மேலும், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற பாவட்டங்களிலும், நஞ்சை நிலங்களில் பயிர் செய்திருந்த நெற்பயிர்கள் தற்போது பெய்த கன மழையால் முழுவதுமாக சேதமடைந்துள்ளன என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு 17,000/- ரூபாய் வழங்கிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பொய் சொல்வது ஒன்று மட்டுமே பாஜகவின் தலைவர் முதல் தொண்டர் வரை பிழைப்பாக இருக்கு- சீறும் கேஎஸ் அழகிரி

Follow Us:
Download App:
  • android
  • ios