ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் தமிழக அமைச்சர்கள் சிலரின் பேச்சுக்களெல்லாம் எல்லை தாண்டிய படு பயங்கர ஜோக்குகளாகவும், பயங்கர மிரட்டல்களாகவும் போய்க் கொண்டிருக்கின்றன. இதுக்கு ஒரு எண்டு கார்டே கிடையாதா? என்று தமிழக மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், மூலவரான எடப்பாடியார் நடவடிக்கை சாட்டையை கையில் எடுத்துவிட்டார்! என்று தகவல்கள் தடதடக்கின்றன. 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி துவக்கத்தில் வெள்ளந்தித் தனம் கலந்த விவகாரமாக பேசியபோது ‘அவரோட ஒரே காமெடியா போச்சு’ என்று எளிதாய் கடந்து சென்றது தமிழக அமைச்சரவை. ஆனால் கடந்த சில நாட்களாக ராஜேந்திரபாலாஜியின் பேச்சானது தமிழக அமைச்சரவையின் கண்ணியத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. 
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்ட போதும், கமல்ஹாசனை திட்டும் போதிலும் சமீபத்தில் ராகுல்காந்தியை விமர்சிக்கும் போதிலும் ஒரு எல்லையை தாண்டிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. 

அதிலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான காங்கிரஸை சேர்ந்த மாணிக்கம் தாகூரை சமீபத்தில் விமர்சித்தபோது உச்சபட்ச சர்ச்சையை தொட்டுவிட்டார் அமைச்சர். “விருதுநகரில் மாணிக்கம் தாகூருன்னு ஒருத்தர் ஓட்டுக் கேட்டும் வரலை, நன்றி சொல்றதுக்கும் மக்கள் கிட்ட வரலை. டெல்லியில் பொண்டாட்டி, பிள்ளைகளை வெச்சுக்கிட்டு அங்கேயே படுத்துக்கிட்டு அறிக்கை கொடுக்கிறார். அவர் இங்கே வந்தா துப்பாக்கியை எடுத்து வயித்திலேயே சுடுங்க. ஆனா ஆளுக்கு எதுவும் ஆகிடக்கூடாது. அதனால ரப்பர் குண்ட வெச்சு வயித்துல சுடுங்க.” என்று துவங்கிப் போட்டுப் பொளந்துட்டார். 

அமைச்சரின் இந்த பேச்சு எம்.பி.யை பெரிதும் அதிர்ச்சியும், ஆவேசமும் கொள்ள வைத்தது. அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி சாத்தூர் போலீஸ் ஸ்டேஷனிலும், சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார்களை கொடுத்தனர். இது போதாதென்று டெல்லியில் உள்துறை அதிகாரிகள் சிலரிடம் ராஜேந்திர பாலாஜியின் ரவுசு பேச்சுக்கள் குறித்து புகார் செய்திருக்கிறார் மாணிக்கம் தாகூர். அவர்களும் இதை சீரியஸாக நோக்கிவிட்டு, தமிழக முதல்வர் தரப்பை கூப்பிட்டு விசாரித்ததோடு ராஜேந்திர பாலாஜியை கண்டிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். ‘எதிர்க்கட்சியோ, சொந்தக்கட்சியோ யாரையும் அசிங்கமாகவும், அபாயகரமாகவும் விமர்சிப்பது அழகல்ல. உங்கள் கட்சியின் ஆட்சி மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் மக்கள் உள்ளனர். இந்த நேரத்தில் ஒரு அமைச்சரே இப்படி அவலமாக பேசினால் மோசமாக போய்விடும் உங்கள் அமைச்சரவையின் மரியாதை.’ என்று சொல்லியிருக்கின்றனர்.  

டெல்லியிலிருந்து வந்த கருத்துக்களை உள்வாங்கிக் கொண்ட எடப்பாடியார், ராஜேந்திர பாலாஜி அத்துமீறி நடப்பதாகவும், இவரது பேச்சுக்களால் அமைச்சரவைக்கும், ஆட்சிக்கும் மிக மோசமான விமர்சனம் வந்து சேர்வதாகவும் தனக்கு நெருக்கமான அமைச்சர்களிடம் கொதித்துப் பேசியுள்ளார். அவர் விஷயத்தில் சில முடிவுகள் எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் ‘ரவுசு பேச்சாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வாய்க்கு முதல்வர் ‘லாக்’ போட்டு அமைதியாக்க போகிறார். அதையும் தாண்டி அமைச்சர் தடாலடியாகவே பேசிக் கொண்டிருந்தால் அமைச்சர் மணிகண்டனின் பேச்சுக்கு விளைந்த கதிதான் ராஜேந்திர பாலாஜிக்கும் நடக்கும். முதல்வர் இப்படியொரு அதிரடியை நிகழ்த்த தயங்கமாட்டார்.’ என்று கோட்டை முழுக்கவே ஒரு தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. 
பார்ப்போம்!