ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு முன்பு மக்களின் கருத்தை கேளுங்கள்- அரசுக்கு அட்வைஸ் சொன்ன இபிஎஸ்

 ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு வரும் மத்திய அரசின் நிதி பெருமளவு குறையக்கூடிய அபாயமும் உள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு அப்பகுதி மக்களின் கருத்தினை அறிந்து முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

EPS insists on asking public opinion regarding upgradation of panchayats to municipalities KAK

பேரூராட்சி டூ ஊராட்சி

உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் டிசம்பர் 2024-ல் முடிவடைய உள்ளதால் அதற்குப் பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மூலம் கருத்துரு அனுப்புமாறு அரசு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் அவ்வூராட்சியில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையிலும், தேவைகளின் அடிப்படையிலும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்கிறது. அதன்படி, 

மத்திய நிதி கமிஷன் நிதி (இது பேரூராட்சி/நகராட்சிகளுக்குக் கிடையாது), 100 நாள் வேலை திட்ட நிதி இரண்டு விதமாக செலவிடப்படுகிறது. (இது, பேரூராட்சி/நகராட்சிகளுக்குக் கிடையாது) பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் கிராமப்புற மக்களுக்கு சொந்த வீடு கட்ட நிதியுதவி(இது, பேரூராட்சி/ நகராட்சிகளுக்குக் கிடையாது)  தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்துடன் கழிப்பிடம் திட்டம் (இது பேரூராட்சி/நகராட்சிகளுக்கு முழு மானியம் வழங்கப்படுவதில்லை)

EPS insists on asking public opinion regarding upgradation of panchayats to municipalities KAK

வீட்டு வரி சொத்து வரி உயரும்

பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு இதுபோன்ற மத்திய அரசின் நிதி வழங்கப்படுவதில்லை. நகரப் பகுதிகளுக்கு மாநில அரசு வழங்கும் நிதி மற்றும் அவர்கள் வசூலிக்கும் வரி வருவாய் மூலம்தான் பணிபுரிபவர்களுக்கு சம்பளம், சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிதாக சாலைகளைப் போடுதல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும், பல்வேறு நலத் திட்டங்களுக்கும் செலவிட முடியும். மத்திய அரசின் நிதி இல்லாமல், மாநில அரசின் நிதியில் நகரப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது.

எனவே, தற்போதுள்ள ஊராட்சிகளையோ அல்லது ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளையோ, நகரப் பகுதிகளுடன் இணைப்பதால் மத்திய அரசு, ஊராட்சிகளுக்கு நேரடியாக வழங்கும் நிதி நின்றுபோவதுடன், புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிகளின், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயரும்; வீட்டுவரி மற்றும் சொத்துவரி பல மடங்கு உயரும், புதிய வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான செலவு அதிகரிக்கும் என்று, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அதிக பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.

EPS insists on asking public opinion regarding upgradation of panchayats to municipalities KAK

மாநிலங்களிடமிருந்து பெறப்படும் வரி வருவாய்தான் மீண்டும் மத்திய அரசு நிதியாக அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊராட்சிகளின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. எனவே, ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு வரும் மத்திய அரசின் நிதி பெருமளவு குறையக்கூடிய அபாயமும் உள்ளது. உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் தமிழ் நாட்டிலேயே அதிக அளவு பேரூராட்சிகள், அதாவது 55 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில் 25 ஊராட்சிகளை20 பேரூராட்சிகளுடன் இணைத்துக்கொள்ள பேரூராட்சிகள் இயக்குநரகம் மாவட்ட நிர்வாகத்திற்கு கருத்துரு அனுப்பி உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைவதுடன், அம்மாவட்டத்திற்கு வரும் மத்திய அரசின் நிதி பங்களிப்பு பெருமளவு குறையும். தற்போது நகரப் பகுதிகளுடன் இணைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ள 25 ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலைமை ஏற்படும். எனவே, தமிழகம் முழுவதும் இதுபோன்று ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

P.S Raman : அரசு தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம்.! யார் இவர் தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios