விளம்பரத்திற்காக ஸ்டாலினை வைத்து போட்டோ ஷூட்..! மருத்துவத்திற்காக அலையும் மக்கள்..? இறங்கி அடிக்கும் இபிஎஸ்
மக்களைத் தேடி மருத்துவம்' என்ற செயல்படாத திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய மக்களின் உயிரோடு திமுக அரசு விளையாடுவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மினி கிளினிக் திட்டம்
அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தக்கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி காலத்தில் “அம்மா மினி கிளினிக்” என்று ஆரம்பிக்கப்பட்டு, சாதாரண காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு அருகே உள்ள “அம்மா மினி கிளினிக்"களுக்குச் சென்று மருத்துவ உதவி பெற்று வந்த ஒரு அற்புதமான திட்டத்தை, மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரு திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கி, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற ஒரு பயன் இல்லாத திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு பிரமாண்டமாய் ஒரு தொடக்க விழாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த விடியா திமுக அரசு நடத்தியது. தற்போது அந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தமிழக மக்களுக்குத் தெரியவில்லை.
மக்களை தேடி மருத்துவம்
'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் மருத்துவர்கள்/மருத்துவப் பணியாளர்கள், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களுக்கு மாதம் தோறும் மருந்து, மாத்திரைகள் தர இருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்திருந்தது.அதன்படி "முதற்கட்டமாக இந்த நோய்களுக்கு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மருந்து வாங்கிச் சாப்பிடும் 20 லட்சம் பேரின் இல்லங்களுக்கே மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் நேரில் சென்று மருந்து, மாத்திரைகளைக் கொடுக்க இருக்கிறோம் என்றும், மேலும் கிராமம், நகரம் எனத் தமிழகம் முழுவதும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வீடு தேடிச் சென்று கண்டறிந்து, அதில் அரசு மருத்துவமனையில் மருந்து சாப்பிட விருப்பப்படுகின்ற ஒரு கோடி பேரைத் தேர்ந்தெடுக்க இருக்கிறோம் என்றும், இதற்கு 6 மாத காலம் இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்" என்று கடந்த ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தைத் துவக்கி வைக்கும்போது, இந்த விடியா அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
செயல்படாத மக்களை தேடி மருத்துவம்
இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 40 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்று தமிழக அரசு அடுத்த சில நாட்களில் தெரிவித்துள்ளது.'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் இன்றைய அவல நிலை குறித்து பலதரப்பட்ட மக்களின் புலம்பல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அதன்படி பெரும்பாலான நோயாளிகள் கூறுவது: போனவங்க வரவே இல்ல! முதல் நாள் மாத்திரை கொடுத்துவிட்டுப் போனவங்க, இப்பவரைக்கும் ஒருநாள் கூட திரும்ப வந்து செக் பண்ணல! போட்டோ எடுக்குறதுக்காக மட்டும் வந்தாங்க! யாராவது வந்து கேட்டா அடிக்கடி வர்றாங்கன்னு சொல்லச் சொன்னாங்க! மாசா மாசம் வீட்டுக்கே வந்து மாத்திரை தந்து, BP, Sugar செக் பண்ணிட்டுப் போவோம்னு சொன்னாங்க. அதுக்கப்புறம் இதுவரை ஒருநாள் கூட வந்து பார்க்கல. பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட காசு கொடுத்து மாத்திரை வாங்கிட்டு வந்து தரச்சொல்லி சாப்பிட்டுகிட்டு இருக்கேன். பக்கத்துல இருக்கிற நர்ஸுங்ககிட்ட கேட்டா, 'இது என் வேலை இல்லை. நீங்க போய் கேஸ் குடுங்க'ன்னு சொல்றாங்க. முடக்குவாதத்துக்கு பிசியோதெரபி சிகிச்சைக்காக ஒருநாள் வந்து பார்த்துட்டு கணக்கு எழுதிட்டு, நீங்களே எக்சர்சைஸ் பண்ணிக்கங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.
நிர்வாணப்படுத்தி அடிக்கிறாங்க..! அலறி துடிக்கும் ஹரி நாடார்...! மனைவிக்கு பரபரப்பு கடிதம்
போட்டோ ஷூட் முதலமைச்சர்
அம்மா அரசின் ஆட்சியில், கொரோனாவிற்கு மருந்தே கண்டுபிடிக்கப்படாத காலத்தில், தனியார் மருத்துவமனைகள் பல இயங்காத நேரத்தில், இப்போதுள்ள அதே அரசு மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து கொரோனாவிற்கும், மற்ற அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். குறிப்பாக, அரசு மகப்பேறு மருத்துவமனைகள் மூலம் பயனடைந்த தாய்மார்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன். அதே அரசு மருத்துவர்கள்தான் இப்போதும் பணிபுரிகின்றனர். ஆனால் இன்று, அரசு மருத்துவமனைகளுக்கே மக்கள் செல்ல அஞ்சும் நிலையை இந்த விடியா திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.வெற்று விளம்பரத்திற்காக மக்களைத் தேடி மருத்துவம் என்று அறிவித்துவிட்டு, முதலமைச்சரை வைத்து 'போட்டோ ஷூட்' நடத்திவிட்டு, மக்களை, மருத்துவத்தைத் தேடி அலைய வைக்கும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். காழ்ப்புணர்ச்சி அரசியலை ஓரம் கட்டிவிட்டு, மக்களின் நலனுக்காக அம்மாவின் அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை மீண்டும் துவக்கிட வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்க திட்டமா..? ஆட்குறைப்பு நடவடிக்கையா..? சீறிய ராமதாஸ்