12,000 காலிபணியிடம்.!தலைமை ஆசிரியரும் இல்லை, ஆசிரியர்களும் இல்லை! பள்ளியை திறந்து என்ன செய்ய.? சீறும் இபிஎஸ்
கோடை விடுமுறைக்கு பின் வருகிற 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிக்கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் 7.6.2023 அன்று திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், சுமார் 670 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும்; சுமார் 435 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கவனம் செலுத்தி பாடம் எடுக்க முடியாத நிலை
ஒரு வகுப்புக்கு அதிகபட்சமாக 35 முதல் 40 மாணவர்கள் இருக்கவேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ள அளவைக் காட்டிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக வகுப்புகளில் இரு மடங்கு மாணவர்கள், அதாவது 60-க்கும் மேலே மாணவர்கள் படிக்கின்றனர் என்றும், இதனால் வகுப்பறைகளில் மாணவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் (Class Control) வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக, ஒரு வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமான மாணவர்கள் படிக்கும் நிலையில், ஆசிரியர்களால் ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்தி பாடம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்ட காரணத்தினால், சென்ற ஆண்டு 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்தன.
50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுதவில்லை
குறிப்பாக தமிழ் எங்கள் உயிர்மூச்சு என்று போலிவேஷம் போடும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் +2-வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத வராதது அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஆராய இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசு ஒரு குழு ஒன்றை அமைத்ததாக செய்திகள் தெரிவித்தன. அக்குழுவின் அறிக்கை என்னவாயிற்று என்று இதுவரை தெரியவில்லை. ஆசிரியர் பணியிடங்களும் முழுமையாக நிரப்பாத நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது பெற்றோர்கள் மத்தியில், தங்களது குழந்தைகளின் கல்வி பற்றி பெரும் சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கலந்தாய்வினை நடத்திடுக
ஏற்கெனவே தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பலமுறை பல்வேறு காரணங்களைக் கூறி இந்த விடியா திமுக அரசு தள்ளி வைத்துள்ளது. தற்போது, ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே, இம்முறையாவது திட்டமிட்டபடி கலந்தாய்வினை நடத்திட வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இதன் மூலம் குறைந்தபட்சம் மிகை ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல இயலும். ஓரளவு ஆசிரியர் காலிப் பணியிடங்களும் பணி மாறுதல் மூலம் நிரப்பிட முடியும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பினால் மட்டுமே, அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டில் மாணவர்கள் படிப்பு பாதிக்காமல் இருக்கும் என்பது ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.
12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள்
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவதற்கும், மாணவ, மாணவிகளை கட்டுப்படுத்துவதற்கும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில், வருகின்ற 7.6.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று நிர்வாகத் திறனற்ற திமுக அரசு அறிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோல கற்பித்தலுக்கு முதன் முறையாக சுமார் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை இந்த அரசு திறக்க உள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் தள்ளிபோகிறது? முதலமைச்சரோடு அன்பில் மகேஷ் அவசர ஆலோசனை