தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது மீண்டும் தள்ளிபோகிறது? முதலமைச்சரோடு அன்பில் மகேஷ் அவசர ஆலோசனை
கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி திறப்பு 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதியை வருகிற 12 ஆம் தேதி ஒத்திவைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவடைந்தது. இதனையடுத்து மாணவர்களுக்கான கோடை விடுமுறையானது சுமார் ஒரு மாதம் காலம் விடப்பட்டிருந்தது. ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களை தாண்டி ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கமானது குறையாமல் அதிகரித்து வருகிறது. 18க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் வெயிலானது 100 டிகிரியை தாண்டியது. இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் 1 ஆம் தேதிக்கு பதிலாக 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
வெயில் தாக்கம் அதிகரிப்பு
கேரளாவில் பருவமழை தொடங்காத காரணத்தால் வெயிலானது தமிழகத்தில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் 108 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையானது நீடித்தது. இந்தநிலையில் நாளை மறுதினம் அதாவது ஜூன் 7 ஆம் தேதி பள்ளியானது திறக்கப்படவுள்ளது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருக்கும் நிலையில் பள்ளிகள் திறந்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்திருந்தனர். எனவே பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பா.?
இதனையடுத்து பள்ளிகள் திறப்பு தேதியானது 7 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச்செயலகத்தில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அப்போது பள்ளி திறப்பதற்கான தேதி மாற்றப்படுமா? அல்லது நாளை மறுதினம் வழக்கம் போல் தொடங்குமா என தெரியவரும். அதே நேரத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறி பள்ளிகள் திறப்பை 12 ஆம் தேதிக்கு ஏற்கனவே ஒத்திவைத்து பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளனர்.
இதையும் படியுங்கள்
அனல் கக்கும் வெயில்..! பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை முடிவு என்ன.?