உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் சர்வே எதிரொலியாக அதிமுக தரப்பு குஷியாகி உள்ளதாம்.
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் சர்வே எதிரொலியாக அதிமுக தரப்பு குஷியாகி உள்ளதாம்.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை விட, அதற்காக தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பற்றிய பேச்சுகள் ஹைலைட்டாக இருக்கிறது. சுத்தியலால் உடைக்க முடியாத வெல்லம், இது மிளகாள் தூள் இல்லை மரத்தூள், மிளகு கிடையாது பப்பாளி விதை என்று டிசைன், டிசைனாக இணையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி மீம்சுகளினால் திணறடிக்கின்றனர் நெட்டிசன்கள்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவில் மெஜாரிட்டியான இடங்களை திமுக அள்ளியது. அதிமுக மீதான கோபம், சட்டசபை தேர்தல் முடிவின் தாக்கம் என அப்போது காரணங்கள் அடுக்கப்பட்டன. இனி அடுத்து வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நோக்கி தான் அனைத்து அரசியல் கட்சிகளின் கண்களும் இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக இந்த முறை அதிமுக எக்காரணம் கொஞ்சம் கோட்டை விட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம். கட்சி தலைமை இது குறித்து முக்கிய நிர்வாகிகளிடம் கலந்து பேசி இருக்கிறது. குறிப்பாக 2022ம் ஆண்டில் திமுக மற்றும் தமிழக அரசின் மீது மக்களின் மதிப்பீடு எப்படி இருக்கிறது? பொங்கல் தொகுப்பு வினியோகம் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் மக்களை ஈர்த்திருக்கிறதா? என்று ஆராயப்பட்டதாம்.
எதிர்க்கட்சி தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய அதிமுக பிரமுகர்களை பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து என்ன நிலவரம் என்றும், உள்ளாட்சி தேர்தலில் அதன் பிரதிபலிப்பு எப்படி இருக்கும் என்றும் விசாரித்து உள்ளாராம்.

அப்போது, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்தாண்டு அதிமுக அளித்த 2500 ரூபாய் போன்று இப்போது தரப்படாதது பற்றிய பேச்சுகள், அதிருப்திகள் தான் மக்களின் மனதில் இருந்ததாம்.
குறிப்பாக ஏழை, எளிய மக்களை பெருமளவில் மகிழ்ச்சி அடைய வைத்த பொங்கல் பரிசு பணம் கொரோனா லாக்டவுனால் நிலைகுலைந்து போன பெரும்பாலான மக்களை ஓரளவு சமாளிக்க வைத்ததாம். ஆனால் இந்தாண்டு பொங்கல் பரிசு பணம் கிடையாது, பரிசு தொகுப்பிலும் ஏக குளறுபடி என்று மக்கள் தரப்பில் கடும் அதிருப்தி காணப்படுகிறதாம்.
இந்த விவரங்கள் அனைத்தும் உள்ளது உள்ளபடியே நேரிடையாக எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டதாம். கட்சியினர் கொடுத்த விவரங்களை தாண்டி, கட்சி சாராத அதே நேரத்தில் நடுநிலைவாதிகளிடம் இருந்தும் அதிருப்தி மற்றும் ஏமாற்றம் வெளிப்பட்டதாம்.

பொங்கல் பரிசு தொகுப்பால் மக்களின் கோபம் இப்போது திமுகவின் மீது செமத்தியாக இருக்கிறதாம். மக்களின் உச்சக்கட்ட கோபம் திமுக மீது பாய்ந்து இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்றும், அதிமுகவுக்கு குறிப்பிடத்தக்க அல்லது பாதிக்கு பாதி வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்.

அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இந்த விவரங்களை கட்சியின் முக்கிய தலைவர்களிடம் பகிர்ந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் களப்பணிகளை முடுக்கிவிடுமாறு கூறி உள்ளாராம். பணத்தை காரணம் காட்டி தேர்தல் பணியில் சுணக்கமாக இருந்துவிட கூடாது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளாராம். இந்த விவரங்கள் அனைத்தும் திமுக தரப்பின் கவனத்துக்கும் சென்றுவிட்டபடியால், வியூகத்தை மேலும் வலுவாக்க சூரிய தரப்பு முடிவெடுத்து இருக்கிறதாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
